ஈரோட்டில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ நெருங்கியது


ஈரோட்டில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ நெருங்கியது
x
தினத்தந்தி 26 Jun 2021 9:13 PM GMT (Updated: 26 Jun 2021 9:13 PM GMT)

ஈரோட்டில், பெட்ரோல் விலை ரூ.100-ஐ நெருங்கியது.

ஈரோடு
ஈரோட்டில், பெட்ரோல் விலை ரூ.100-ஐ நெருங்கியது.
பெட்ரோல்-டீசல்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலர் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரத் தொடங்கியது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ தாண்டி உள்ளது.
விலை உயர்வு
ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. நேற்று முன்தினம் 99 ரூபாய் 45 காசுக்கு விற்பனையான ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று 31 காசு விலை உயர்ந்து 99 ரூபாய் 76 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100-ஐ நெருங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதேபோல் நேற்று முன்தினம் 93 ரூபாய் 47 காசுக்கு விற்பனையான ஒரு லிட்டர் டீசல் நேற்று 34 காசு அதிகரித்து 93 ரூபாய் 81 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஈரோட்டில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் நடுத்தர மக்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story