குடும்ப வறுமையால் சிகிச்சைக்கு பணம் இல்லாததால் மனவிரக்தி: கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை
பழவேற்காட்டில் கணவரின் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் மனமுடைந்த மூதாட்டி கணவருடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
பொன்னேரி,
பொன்னேரி அருகே பழவேற்காடு ஊராட்சியில் உள்ள பூமி கோட்டை பகுதியை சேர்ந்தவர் கண்ணம்மா (வயது 70). இவரது கணவர் கோபால்(71). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், தம்பதிகள் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சியில் பணிபுரிந்து வந்த கண்ணம்மா, ஓய்வு பெற்ற பின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்து வந்தார்.
100 நாட்கள் மட்டும் வேலை கிடைத்த நிலையில் மற்ற நாட்களில் வேலை இல்லாமல் வறுமையில் வாடி வந்தார். பின்னர் ஊராட்சியில் தினக்கூலி அடிப்படையில் தற்போது வரை பெண் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் இவரது கணவர் கோபாலுக்கு சிறுநீரகக்கோளாறு பிரச்சினை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரது மருத்துவ செலவுக்கு அடிக்கடி பணம் தேவைப்பட்டதாக தெரிகிறது. அதன் காரணமாக கண்ணம்மா கடன் வாங்கி மருத்துவம் பார்த்து குடும்பத்தையும் கழித்து வந்துள்ளார். இதற்கிடையே கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட வறுமையால் சிரமமடைந்த கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஊராட்சியின் சார்பில் ஊதியமாக 7,400 ரூபாய் கண்ணம்மாவுக்கு வழங்கப்பட்ட நிலையில் தான் வாங்கிய கடனை திருப்பி செலுத்தினார். பின்னர் நேற்று முன்தினம் இரவு கோபாலும், மனைவி கண்ணம்மாவும் சேர்ந்து விஷத்தை குடித்தனர். அதில், கண்ணம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
கோபால் உயிருக்கு போராடிய நிலையில், வாயில் நுரை தள்ளிய நிலையில் இருந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவரை மீட்டு பழவேற்காடு அரசு ஆஸ்பத்தரிக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் கோபால் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த திருப்பாலைவனம் போலீசார் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட தூய்மைப் பணியாளர் கண்ணம்மா அவரது கணவர் கோபால் ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story