ஈரோட்டில் சாலையோரம் கடைகளை வைக்க அனுமதி மறுப்பு: காய்கறி வியாபாரிகள் அதிகாலையில் மறியல் போராட்டம்


ஈரோட்டில் சாலையோரம் கடைகளை வைக்க அனுமதி மறுப்பு: காய்கறி வியாபாரிகள் அதிகாலையில் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 28 Jun 2021 3:45 AM IST (Updated: 28 Jun 2021 3:45 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில், சாலையோரம் கடைகள் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதால் காய்கறி வியாபாரிகள் அதிகாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு
ஈரோட்டில், சாலையோரம் கடைகள் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதால் காய்கறி வியாபாரிகள் அதிகாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காய்கறி வியாபாரிகள்
ஈரோடு மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையில், வ.உ.சி. மைதானத்தில் செயல்பட்டு வந்த தினசரி காய்கறி மார்க்கெட், ஈரோடு பஸ் நிலைய வளாகத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது.
அங்கு மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மொத்த வியாபாரத்திற்கு மட்டுமே மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. நடமாடும் வாகன வியாபாரிகள், சில்லரை காய்கறி வியாபாரிகள் மட்டுமே காய்கறிகளை வாங்கி வந்தனர்.
சாலை மறியல்
இதனால் ஈரோடு பஸ் நிலையம் அருகே சத்தி ரோட்டில் வியாபாரிகள் சிலர் சாலையோரம் கடை அமைத்து காய்கறிகளை விற்பனை செய்து வந்தனர். இங்கு கடைகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்ததால் மக்கள் அதிகளவில் கூடி வந்தனர். இதனை தடுக்க சாலையோரம் கடை அமைக்க கூடாது என மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.
மீறி கடை அமைத்தால் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. இதனால், அதிருப்தி அடைந்த சாலையோர வியாபாரிகள் நேற்று அதிகாலை 3 மணி அளவில் சத்தி ரோடு ஸ்வஸ்திக் கார்னர் பகுதியில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடைகள் அமைக்க கூடாது
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது வியாபாரிகள் கூறும்போது, ‘கொரோனா பரவல் காரணமாக கடந்த சில வாரங்களாக கடை வைக்கவில்லை. அரசு அனுமதியின்பேரில் தான் சாலையோரம் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகிறோம். தற்போது, மாநகராட்சி அதிகாரிகள் இங்கு கடைகள் அமைக்க கூடாது என கூறுகின்றனர்.
அனுமதி
நாங்கள் சில்லரை வியாபாரிகள், கடை வைக்கவில்லை என்றால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே, எங்களுக்கு வேறு பகுதியில் கடைகள் அமைக்க அனுமதிக்க வேண்டும்' என்றனர்.
இதைத்தொடர்ந்து வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்ற மாநகராட்சி அதிகாரிகள், அவர்களுக்கு வ.உ.சி. பூங்கா ரோட்டில் தற்காலிகமாக கடை அமைத்துக்கொள்ள அனுமதி அளித்தனர். அதன்பேரில், வியாபாரிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story