ஈரோட்டில் ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் 7½ பவுன் நகை திருடிய தொழிலாளி கைது

ஈரோட்டில், ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் 7½ பவுன் நகை திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
ஈரோட்டில், ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் 7½ பவுன் நகை திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
ஆசிரியை
ஈரோடு நாராயணவலசு புது ஆசிரியர் காலனி திரு.வி.க. நகரை சேர்ந்தவர் பாக்கியம் (வயது 82). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரை அவரது உறவினர் மகனான திண்டல் வீரப்பம்பாளையத்தை சேர்ந்த தமிழரசு (62) என்பவர் தினசரி வந்து உணவு கொடுத்து கவனித்து வந்தார். பாக்கியம் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். பாக்கியத்தின் வீட்டின் மேல் மாடியில் உள்ள வீட்டில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கார் சர்வீஸ் செய்யும் நிலையத்தில் தொழிலாளியாக வேலை பார்க்கும் விக்னேஷ் (26) என்பவர் தனது மனைவி, குழந்தையுடன் குடியேறினார்.
7½ பவுன் திருட்டு
இந்த நிலையில், பாக்கியத்துக்கு உணவு கொடுப்பதற்தாக தமிழரசு நேற்று முன்தினம் அவருடைய வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, பாக்கியத்தின் வீட்டில் இருந்த டிரங் பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவரிடம் கேட்டுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், பெட்டியை பார்த்தபோது அதில் வைக்கப்பட்டு இருந்த 7½ பவுன் நகையை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாக்கியத்தின் உறவினர் தமிழரசு நேற்று ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய முருகன், டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
கைது
இதற்கிடையில் பாக்கியத்தின் மேல் வீட்டிற்கு வாடகைக்கு வந்த விக்னேசை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது பாக்கியத்தின் வீட்டில் நகையை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். அதன்பேரில், விக்னேசை போலீசார் நேற்று கைது செய்து, அவரிடம் இருந்து 7½ பவுன் நகையை மீட்டனர்.
கைதான விக்னேசின் மனைவி செவிலியராக உள்ளதும், அவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு விக்னேசிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றதும், இதனால் விக்னேஷ் மதுபோதையில் இந்த திருட்டு செயலில் ஈடுபட்டுள்ளார் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story