தென்னை மரங்களை பராமரிக்கும் வழிமுறைகள்- வேளாண்மை அதிகாரி விளக்கம்
தென்னை மரங்களை பராமரிக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண்மை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
ஈரோடு
தென்னை மரங்களை பராமரிக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண்மை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
தென்னை சாகுபடி
ஈரோடு மாவட்டத்தில் நம்பியூர் உள்பட பல்வேறு பகுதிகளில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போதைய நிலையில் தேங்காய்க்கு நல்ல விலை கிடைத்து வரும் நிலையில் தேங்காய்களை எலி, மரநாய் மற்றும் சிவப்பு கூன்வண்டுகள் தாக்கி அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்தி வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தடுப்பு முறைகள் குறித்து நம்பியூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முரளி கூறியதாவது:-
தென்னை மரங்களில் கோடை காலத்தில் எலிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். எலிகள் இளநீர் காய்களில் துளையிட்டு சேதப்படுத்துவதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகின்றது. இதேபோல் ஓலைகள் மற்றும் பாளைகளையும் கடித்து சேதப்படுத்தும்.
சிவப்பு கூன்வண்டு தாக்குதல்
எலிகளை கட்டுப்படுத்த புரோமோடையலோன் மருந்தினை மரத்திற்கு 10 கிராம் வீதம் மரத்தின் கொண்டை பகுதியில் 12 நாட்கள் இடைவெளியில் 2 முறை வைக்க வேண்டும். பச்சரிசி, தேங்காய் எண்ணெய் மற்றும் ஜிங்க் பாஸ்பசை கலந்த விஷ மருந்தை எலி இருக்கும் குழியினுள் போட வேண்டும்.
சிவப்பு கூன்வண்டுகள் தாக்குதலால் ஓலைகள் மஞ்சள் நிறமாக மாறி கொண்டைப்பகுதி முறிந்து மரமானது பட்டு விடும். தாக்குதலால் பட்டுப்போன மரங்களை சிறிய துண்டுகளாக வெட்டி புழுக்களை தீ இட்டு அழிக்க வேண்டும்.
காய்களை பறிக்கக்கூடாது
இதை கட்டுப்படுத்த பாலீத்தீன் பையில் மோனோகுரோட்டோபாஸ் தண்ணீர் கலந்து புதிய வேரின் நுனியை சீவி அதில் கட்டிவிடுவதன் மூலம் சிவப்பு கூன்வண்டுகளை எளிதாக அளிக்கலாம்.
வேரில் மருந்து கட்டுவதற்கு முன் மரத்திலுள்ள தேங்காய் மற்றும் இளநீர் காய்களை பறித்துவிட வேண்டும். மருந்து கட்டிய பின்பு 60 நாட்களுக்கு தேங்காய் மற்றும் இளநீர் காய்களை பறிக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story