மதுரையில் ஒரே நாளில் 9 பேர் சாவு


மதுரையில் ஒரே நாளில் 9 பேர் சாவு
x
தினத்தந்தி 28 Jun 2021 10:01 PM IST (Updated: 28 Jun 2021 10:01 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில் கொரோனாவுக்கு நேற்று 9 பேர் உயிரிழந்தனர். புதிதாக 78 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது.

மதுரை, ஜூன்.
மதுரையில் கொரோனாவுக்கு நேற்று 9 பேர் உயிரிழந்தனர். புதிதாக 78 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது.
கொரோனா பாதிப்பு
மதுரையில் நேற்று 78 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 55 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 144 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல், நேற்று 61 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 35 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். குணம் அடைந்து வீட்டிற்கு சென்றுள்ளவர்களுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கும் மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன.
நேற்றுடன் மதுரையில் 70 ஆயிரத்து 421 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் 630 ஆக குறைந்துள்ளது. இதற்கிடையே மதுரையைச் சேர்ந்த 55, 58, 53 வயது ஆண்கள், 82, 78, 90, 67 வயது முதியவர்கள், 68, 65 வயது மூதாட்டிகள் என மொத்தம் 9 பேர் நேற்று உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 2 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும், 7 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும் உயிரிழந்தனர். இதன் மூலம் மதுரையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,093 ஆக உயர்ந்துள்ளது.
அலட்சியம் வேண்டாம்
கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், மதுரையில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இதனால், பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அன்றாட பணிகளும் சீராக நடைபெறுகிறது. 
இருந்தாலும் கொரோனா முழுமையாக குறையவில்லை என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். வெளியிடங்கள், கடைகளுக்கு செல்லும்போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். குறிப்பாக குழந்தைகளை பொது இடங்களுக்கு அழைத்து செல்லக்கூடாது. இந்த விஷயத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றனர்.

Next Story