பொள்ளாச்சியில் சலூன், செல்போன், டீக்கடைகள் திறப்பு
ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து சலூன், செல்போன் மற்றும் டீக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன.
பொள்ளாச்சி
ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து சலூன், செல்போன் மற்றும் டீக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன.
கூடுதல் தளர்வுகள்
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் பாதிப்பு உச்சத்தில் இருந்தது. இதன் காரணமாக கடந்த மாதம் 10-ந் தேதி முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் பாதிப்பு குறைய தொடங்கியது. இதையடுத்து கடந்த 7-ந் தேதி ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இதை தொடர்ந்து நேற்று முதல் மேலும் கூடுதல் தளர்களுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதன்படி டீக்கடைகள், சாலையோர உணவு கடைகளில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
இதைதவிர மின் சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், பாத்திர கடைகள், செல்போன் கடைகள், சலூன் கடைகள், பேன்சி, அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்ட சில கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
இதை தொடர்ந்து பொள்ளாச்சியில் நேற்று வழக்கம் போல் வாகன போக்குவரத்து காணப்பட்டது. செல்போன் பழுதுபார்க்கும் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
அங்கு சமூக இடைவெளி காற்றில் பறந்ததால் மீண்டும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. செல்போன் கடைகளுக்கு வந்த பொதுமக்கள் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தியதால் ராஜாமில் ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
பெரும்பாலான சலூன் கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு கிருமி நாசினி மருந்து கொடுத்து கைகளை சுத்தப்படுத்திய பிறகே அனுமதிக்கப்பட்டனர். டீக்கடைகளில் பார்சல் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டும், சில கடைகளில் டீ குடிக்க அனுமதித்தனர்.
ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் பொள்ளாச்சியில் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது. இதேபோன்று ஆனைமலை, கோட்டூர் பகுதிகளிலும் சலூன், செல்போன் உள்ளிட்ட கடைகள் திறக்கப்பட்டன.
இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
சீல் வைக்கப்படும்
கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் தொற்று உள்ள மாவட்டங்களை வகைப்படுத்தி அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. அனைத்து கடைகள், வணிக நிறுவனங்களில் மத்திய, மாநில அரசுகளின் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
கடைகளில் கிருமி நாசினி மருந்து பொதுமக்கள் பார்வையில் தெரியும்படி வைக்க வேண்டும். கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களும், பணிபுரியும் ஊழியர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை மீறும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story