கோவில்களில் சித்த மருத்துவமனை அமைக்கக்கோரிய மனு தள்ளுபடி
கோவில்களில் சித்த மருத்துவமனை அமைக்கக்கோரிய மனு மதுரை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
மதுரை,ஜூன்
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த டாக்டர் ஜெயவெங்கடேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “கோவில்களில் சித்த மருத்துவ மையங்கள் அமைத்து அதற்கான சித்த மருத்துவர்களை நியமிக்க, கடந்த 1970-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் எத்தனை சித்த மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர் என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் கேட்டபோது, 6 சித்த மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றி வருவது தெரியவந்தது. இதுதொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் எந்த பதிலும் இல்லை.
எனவே தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் சித்த மருத்துவமனையை அமைக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது இதுகுறித்து பதில் அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், தற்போது கொரோனா தொற்றுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மனுதாரரின் கோரிக்கை அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story