சென்னிமலை அருகே பூச்சிக்கொல்லி மாத்திரை கொடுத்து 3 பேரை கொன்ற கொலைகாரன் சிக்கியது எப்படி?- பரபரப்பு தகவல்கள்
சென்னிமலை அருகே பூச்சிக்கொல்லி மாத்திரை கொடுத்து 3 பேரை கொன்ற கொலைகாரன் சிக்கியது எப்படி? என்ற பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.
சென்னிமலை
சென்னிமலை அருகே பூச்சிக்கொல்லி மாத்திரை கொடுத்து 3 பேரை கொன்ற கொலைகாரன் சிக்கியது எப்படி? என்ற பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.
அதன் விவரம் வருமாறு:-
சத்து மாத்திரை
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கே.ஜி.வலசு பெருமாள்மலை பகுதியை சேர்ந்தவர் விவசாயி கருப்பணகவுண்டர் (வயது 75). இவருடைய மனைவி மல்லிகா (58), மகள் தீபா (30) மற்றும் இவர்களது தோட்டத்தில் வேலை செய்து வந்த குப்பம்மாள் (65). இவர்கள் 4 பேரும் கடந்த 26-ந் தேதி வீட்டில் இருந்தார்கள்.
அப்போது ஒரு வாலிபர் அங்கு வந்து கொரோனா பரிசோதனை செய்யவேண்டும். அதற்கு முன்பாக இந்த சத்து மாத்திரையை சாப்பிடுங்கள் என்று 4 பேரிடமும் மாத்திரைகளை கொடுத்தார். அதே நேரம் பக்கத்து தோட்டத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர் அங்கு வந்தார். மாத்திரை கொடுத்த வாலிபர் கல்யாணசுந்தரத்திடம் ஒரு மாத்திரை சாப்பிட சொன்னார். அவர் தான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டதாகவும் அதனால் சத்து மாத்திரை வேண்டாம் என்றும் கூறிவிட்டார்.
மயக்கம்
இந்தநிலையில் கருப்பணகவுண்டர், மல்லிகா, தீபா. குப்பம்மாள் 4 பேரும் மாத்திரை சாப்பிட்டதும் அந்த வாலிபர் அங்கிருந்து புறப்பட்டார். அப்போது கல்யாணசுந்தரம் வாருங்கள் நான் கூட்டி செல்கிறேன் என்று அந்த வாலிபரை மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்றார். சிறிது நேரத்தில் மாத்திரை சாப்பிட்ட 4 பேரும் மயங்கி விழுந்தனர். இதில் சுதாரித்துக்கொண்ட தீபா உடனே கல்யாணசுந்தரத்துக்கு போன் செய்தார். அவர் இதோ நான் வருகிறேன் என்று கூறினார். ஆனால் அவர் வரவில்லை. இதனால் வெளியே சென்றிருந்த தன் கணவர் பிரபுவுக்கு தீபா போன் செய்தார். உடனே அவர் விரைந்து வந்து 4 பேரையும் காரில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே மல்லிகா இறந்தார். குப்பம்மாள் சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும், கருப்பணகவுண்டரும், தீபாவும் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்கள்.
கேள்வி-பதில்
இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் குப்பம்மாளும், தீபாவும் இறந்துவிட்டார்கள். இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர விசாரணை நடத்தினார். அப்போது மாத்திரை கொடுத்த மர்ம வாலிபரை மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்ற கல்யாணசுந்தரத்திடம் முதலில் விசாரணையை தொடங்கினார்.
விசாரணையின்போது போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கல்யாணசுந்தரத்திடம், நீங்கள் ஏன் மர்ம நபர் கொடுத்த சத்து மாத்திரையை சாப்பிடவில்லை என்றார்?, அதற்கு கல்யாணசுந்தரம் நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டதால் சத்து மாத்திரையை சாப்பிடவில்லை என்றார். கொரோனா பரிசோதனை செய்துகொண்டால் சத்து மாத்திரை சாப்பிட கூடாதா? என்றார். அதற்கு கல்யாண சுந்தரத்தால் பதில் சொல்ல முடியவில்லை.
கேமராக்கள் ஆய்வு
அடுத்ததாக சம்பந்தப்பட்ட மர்ம நபரை எங்கு அழைத்து சென்று விட்டீர்கள் என்று கேட்டார். சென்னிமலை மெயின் ரோட்டில் கொண்டு சென்று விட்டதாக கூறினார். உடனே சசிமோகன் அந்த ரோட்டில் உள்ள வீடுகளின் முன்பகுதியில் பொருத்தியிருக்கும் அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்ய சொன்னார். போலீசார் ஆய்வு செய்ததில் சென்னிமலை மெயின்ரோட்டுக்கு கல்யாண சுந்தரம் செல்லவே இல்லை என்று தெரிந்தது.
இதுபோல் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் தனிப்படை போலீசாரின் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி முடிவில் கல்யாண சுந்தரம் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
ரகசிய வாக்குமூலம்
அதாவது கருப்பணகவுண்டரிடம் கடனாக வாங்கிய ரூ.15 லட்சத்தை கல்யாண சுந்தரத்தால் தரமுடியவில்லை. அதனால் அவரை குடும்பத்தோடு கொல்ல திட்டம் தீட்டி உள்ளார். இதற்கு உதவ அதே பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவரை பயன்படுத்தி உள்ளார். அவரிடம் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, தென்னை மரங்களுக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மாத்திரையை நிறம் மாற்றி கருப்பணகவுண்டரின் குடும்பத்தாருக்கு கொடுத்துள்ளார். இதில் எப்படியோ கருப்பணகவுண்டர் உயிர் பிழைத்துக்ெகாண்டார்.
கோவை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் அவரிடம் சூலூரில் உள்ள மாவட்ட முன்சீப் கோர்ட்டு நீதிபதி பி.வைஷ்ணவி ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளார். அதன் அடிப்படையில் 3 பெண்களை கொன்ற கல்யாண சுந்தரத்துக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் கூலிவேலைக்கு வந்த குப்பம்மாள் பரிதாபமாக கொலையில் சிக்கியுள்ளார். அதேபோல் கொலைக்கு உடந்தையாக இருந்த கல்லூரி மாணவரின் வாழ்க்கையும் கல்யாண சுந்தரத்தின் தீய நோக்கத்தால் திசை மாறிவிட்டது.
Related Tags :
Next Story