முறைகேடாக பணி நியமனம்: பட்டு வளர்ச்சித்துறையில் ரூ.25 கோடி மோசடி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்


முறைகேடாக பணி நியமனம்: பட்டு வளர்ச்சித்துறையில் ரூ.25 கோடி மோசடி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்
x
தினத்தந்தி 29 Jun 2021 2:31 AM IST (Updated: 29 Jun 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

பட்டு வளர்ச்சித்துறையில் முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.25 கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சங்க உறுப்பினர்கள் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்து உள்ளனர்.

சேலம்
பட்டு வளர்ச்சித்துறை
தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணன் தலைமையில், நிர்வாகிகள் பலர் நேற்று சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் ஒரு புகார் மனு கொடுத்து உள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கடந்த 2014 மற்றும் 2016-ம் ஆண்டில் பட்டு வளர்ச்சித்துறையில் உதவி ஆய்வாளர்கள், இளநிலை ஆய்வாளர்கள் பணி நேரடியாக நியமனம் செய்யப்பட்டது. அதில் போலி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு வழியில் முறைகேடாக, துறை விதிமுறைகளுக்கு எதிராக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் அவர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பலமுறை துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளோம். ஆனால் நடவடிக்கை இல்லை.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி உள்ளனர்.
ரூ.25 கோடி மோசடி
இது குறித்து சங்க மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணன் கூறும் போது, பட்டு வளர்ச்சித்துறையில் கடந்த 2014 மற்றும் 2016-ம் ஆண்டு 350 இளநிலை ஆய்வாளர், மற்றும் 70 உதவி ஆய்வாளர் பணிகள் முறைகேடாக நியமனம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரூ.25 கோடி மோசடி நடைபெற்று உள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி துறை அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே முறைகேடாக பணி நியமனம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்து உள்ளோம் என்றார்.


Next Story