ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 506 பேருக்கு கொரோனா; 2 பேர் பலி
ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 2 பேர் பலியாகினர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 2 பேர் பலியாகினர்.
506 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருகிறது. எனினும் தமிழக அளவில் பாதிப்பில் ஈரோடு மாவட்டம் தொடர்ந்து 2 -வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 506 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் சிலர் வீட்டு தனிமையிலும், சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 88 ஆயிரத்து 721-ஆக உயர்ந்தது.
2 பேர் பலி
இதற்கிடையில் கடந்த 16-ந்தேதி 32 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா தொற்றினால் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் அவர் 26-ந்தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதேபோல் 62 வயதுடைய முதியவர் ஒருவர் கடந்த 25-ந்தேதி கோவை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 585 ஆக உயர்ந்தது.
மேலும் நேற்று ஒரே நாளில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 603 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 83 ஆயிரத்து 915 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். தற்போது தொற்று உள்ள 4 ஆயிரத்து 221 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Related Tags :
Next Story