அம்மாபேட்டை பகுதிகளில் உள்ள கரும்பு ஆலைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு- கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை
அம்மாபேட்டை பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். மேலும் கலப்படம் செய்வது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். மேலும் கலப்படம் செய்வது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
அம்மாபேட்டை பகுதிகளில் உள்ள சிங்கம்பேட்டை, காட்டூர், ஆனந்தம்பாளையம், சொட்டையனூர், ஆட்டக்காலனூர், ஊமாரெட்டியூர், காடப்பநல்லூர் ஆகிய பகுதிகளில் நாட்டுசர்க்கரை, அச்சு வெல்லம், குண்டு வெல்லம் தயாரிக்கும் தனியார் கரும்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று திடீரென மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தலைமையிலான அதிகாரிகள் காடப்பநல்லூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கரும்பு ஆலைகளில் வெள்ளை சர்க்கரை, ரசாயனம் போன்றவை பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டோம். ஈரோடு மாவட்டத்தில் 44 நாட்டு சர்க்கரை, அச்சு வெல்லம் மற்றும் குண்டு வெல்லம் தயாரிக்கும் கரும்பு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் ஏதாவது கலப்படம் செய்வது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பரிசோதனை
காடப்பநல்லூர் பகுதியில் உள்ள ஒரு கரும்பு ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட அச்சு வெல்லம் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்த பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளில் உள்ள கரும்பு ஆலைகளிலும் ஆய்வு செய்யப்படும்,’ என்றனர். ஆய்வின்போது பவானி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் லட்சுமி கோவிந்தராஜ், செல்வம், ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story