ஈரோட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
ஈரோட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.
ஈரோடு
ஈரோட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.
ஸ்மார்ட் சிட்டி
ஈரோடு மாநகராட்சியில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகள் நடந்து வருகின்றன. ரூ.1,000 கோடி செலவில் அனைத்து துறை சார்ந்த பணிகளும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மாநகரின் அனைத்து வார்டு பகுதிகளிலும் பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஈரோடு கனி மார்க்கெட் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம், நேதாஜி காய்கறி மார்க்கெட், விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் என்று பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளும் நடந்து வருகின்றன.
கலெக்டர் பார்வையிட்டார்
இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஈரோட்டில் நடந்து வரும் பணிகளை கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி நேற்று பார்வையிட்டார்.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள கனிமார்க்கெட் பகுதிக்கு வந்த அவர் அங்கு ரூ.54 கோடியே 50 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகத்தை பார்வையிட்டார். ஜவுளி வளாக கட்டிட வரை படம், இங்கு கொண்டு வரப்பட உள்ள வசதிகள், அமைக்கப்படும் கடைகளின் எண்ணிக்கை, வியாபாரிகளுக்கான கடைகள் ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். அவருக்கு மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன், செயற்பொறியாளர் விஜயகுமார், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உதயகுமார் ஆகியோர் விளக்கி கூறினார்கள்.
பாதாள சாக்கடை
இதுபோல் ரூ.94 கோடி செலவில் மணிக்கூண்டு பகுதியில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை பார்வையிட்டார். வாகன போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் விரைவில் பணிகளை முடிக்க அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் வெண்டிபாளையம் குப்பைக்கிடங்கு பகுதிக்கு சென்ற கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, அங்கு ரூ.42 கோடியில் அமைக்கப்பட்டு உள்ள திடக்கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் மையத்தை பார்வையிட்டார். அங்குள்ள கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளையும் பார்வையிட்டு கேட்டு அறிந்தார்.
சுத்திகரிப்பு நிலையம்
இதுபோல் வெண்டிபாளையம் பீளமேடு பகுதியில் கட்டப்பட்டு உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டார். கழிவுகள் நீரேற்றம் செய்யப்பட்டு சுத்திகரிக்கப்படும் முறையை அவர் ஒவ்வொரு பகுதியாக சென்று பார்வையிட்டார். இதன் மூலம் பயன்பெரும் பகுதிகள் குறித்தும் அவர் கேட்டு அறிந்தார்.
இந்த ஆய்வுப்பணியின்போது மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன், மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story