கொரோனா தாக்குதலில் இருந்து மீண்டவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி கண்டறிய ரத்த பரிசோதனை- அதிகாரி தகவல்


கொரோனா தாக்குதலில் இருந்து மீண்டவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி கண்டறிய ரத்த பரிசோதனை- அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 29 Jun 2021 3:50 AM IST (Updated: 29 Jun 2021 3:50 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தாக்குதலில் இருந்து மீண்டவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி கண்டறிய ரத்த பரிசோதனை நடத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு
கொரோனா தாக்குதலில் இருந்து மீண்டவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி கண்டறிய ரத்த பரிசோதனை நடத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா அலை
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் குறித்த ஆய்வுகள் நாளொரு மேனியும் வளர்ந்து வருகின்றன. கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்காக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, பொதுமக்கள் செலுத்தியும் வருகிறார்கள். ஆனால், கொரோனாவும் விஞ்ஞானிகளுக்கு போட்டியாக உருமாற்றம் அடைந்து பொதுமக்களை பாதித்து வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை கொரோனாவின் 2-ம் அலை சற்று குறைந்து வருகிறது. இதற்கிடையே உருமாறிய கொரோனா டெல்டா பிளஸ் என்ற பெயரில் அடுத்த அச்சத்தை மக்களுக்கு கொடுத்து வருகிறது. 3-வது அலை, டெல்டா பிளஸ் என பொதுமக்களை அச்சுறுத்தும் கொரோனாவிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ரத்த மாதிரி சேகரிப்பு
அதன் ஒரு கட்டமாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறியும் வகையில் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் கொரோனா டெல்டா பிளஸ் வகை வைரஸ் பாதிப்பு தொடங்கி உள்ளது. இந்த பரவலை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
தலா 30 வீடுகளில்...
ஈரோடு மாவட்டத்திலும் தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக மாவட்டத்தில் கொரோனா பாதித்து மீண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறிய ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த பணியில் ஒரு டாக்டர், லேப் டெக்னீசியன்கள், சுகாதார ஆய்வாளர், கிராம சுகாதார செவிலியர் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு ரத்த மாதிரி சேகரிப்பு தொடர்பாக 2 நாள் பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. மொடக்குறிச்சி, சத்தியமங்கலம், பவானி, தாளவாடி உட்பட பல்வேறு பகுதிகளில் இந்த பணி முதல் கட்டமாக தொடங்கி இருக்கிறது. தேர்ந்து எடுக்கப்பட்ட ஒவ்வொரு இடத்திலும் தலா 30 வீடுகளில் உள்ளவரிடம் இந்த பரிசோதனை நடத்தப்படுகிறது.
டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்படுமா?
இதில் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்கள் மட்டுமின்றி, பாதிப்பில் இருப்பவர்கள், காய்ச்சல் வந்ததே தெரியாமல் சரியானவர்கள் உள்பட அனைத்து தரப்பினரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படும். சேகரிக்கப்படும் ரத்த மாதிரிகள் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட உள்ளது. வழக்கமாக தொற்று முடிந்தவுடன் பொதுமக்களிடம் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்து இருக்கிறதா? என்பதை கண்டறிய இந்த சோதனை நடத்தப்படும். இந்த முறை டெல்டா பிளஸ் கொரோனா தொற்று கண்டறிதல் தொடர்பாகவும் இருக்கலாம் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஆனால் இதுபற்றி முறையான எந்த அறிவிப்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story