அரசு பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவியர் சேர்க்கை தொடங்கியது; புதிய புத்தகங்களை முதன்மை கல்வி அதிகாரி முருகன் வழங்கினார்
ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவியர் சேர்க்கை நேற்று தொடங்கியதையொட்டி புதிய புத்தகங்களை முதன்மை கல்வி அதிகாரி முருகன் வழங்கி தொடங்கி வைத்தார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவியர் சேர்க்கை நேற்று தொடங்கியதையொட்டி புதிய புத்தகங்களை முதன்மை கல்வி அதிகாரி முருகன் வழங்கி தொடங்கி வைத்தார்.
மாணவர் சேர்க்கை
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கொரோனா பாதிப்புக்கு ஏற்ப ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. எனவே நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் நேற்று எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்புவரையான வகுப்புகளுக்கு மாணவியர் சேர்க்கை தொடங்கியது.
முதன்மை கல்வி அதிகாரி
முதல் நாளான நேற்று மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் கலந்து கொண்டு பிளஸ்-2 மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கி தொடங்கி வைத்தார்.
இதுபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும் நேற்று மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஈரோடு நகர் மட்டுமின்றி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மாணவ-மாணவிகள் நீண்ட இடைவெளிக்கு பின்னர் பள்ளிக்கூட சீருடைகளை அணிந்து பள்ளிக்கூடங்களுக்கு உற்சாகமாக வந்தனர். அவர்கள் அவரவர் வகுப்பு ஆசிரிய-ஆசிரியைகளை சந்தித்து புதிய பாடப்புத்தகங்களை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர். பெற்றோரும் தங்கள் மகன், மகள்களை பள்ளிகளுக்கு உற்சாகமாக அழைத்துச்சென்றனர்.
காத்து இருந்த பெற்றோர்
இதுபோல் நேற்று மாணவர் சேர்க்கையும் உற்சாகமாக நடந்தது. பல அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கைக்காக பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் காத்து இருந்தனர்.
ஈரோடு அரசு மகளிர் மாதிரி பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் ஆசிரியைகள் மாணவியர் சேர்க்கையில் ஈடுபட்டனர். பெற்றோர்கள் மற்றும் புதிதாக சேர்க்கைக்கு வந்த மாணவிகள் இடைவெளி கடைபிடித்து உட்கார இருக்கை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்க காத்து இருந்தனர். மாலைவரை மாணவியர் சேர்க்கை நடந்தது.
வாட்ஸ்அப் வகுப்பு
இதுபற்றி பள்ளிக்கூட தலைமை ஆசிரியை சுகந்தி கூறும்போது, கடந்த ஒரு வாரமாக எங்கள் பள்ளிக்கூடத்தில் மாணவியர் சேர்க்கைக்கான முன்பதிவு நடந்தது. இதில் 400-க்கும் மேற்பட்ட புதிய மாணவிகள் தங்கள் பெயர்களை பதிவு செய்து இருந்தனர். தற்போது சேர்க்கை தொடங்கி உள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்தவர்களை விட கூடுதலாக மாணவிகள் வருகை உள்ளது. எங்கள் பள்ளிக்கூடத்தில் வாட்ஸ்அப் மூலம் ஆசிரிய-ஆசிரியைகள் பாடம் எடுத்து வருகிறார்கள். கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள் ஒளிபரப்பப்படும் கால அட்டவணையை அனைத்து மாணவிகளுக்கும் வழங்கி வருகிறோம். தொடர்ந்து மாணவியர் சேர்க்கை நடைபெறும் என்றார்.
Related Tags :
Next Story