வெளிமாநிலத்திற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது


வெளிமாநிலத்திற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 29 Jun 2021 5:33 AM GMT (Updated: 29 Jun 2021 5:33 AM GMT)

காஞ்சீபுரம்-அரக்கோணம் சாலையில் வெளிமாநிலத்திற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.

காஞ்சீபுரம்,

தமிழகத்தில் ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் அரிசியை சிலர் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய வெளி மாநிலத்திற்கு பஸ், ரெயில்கள் மூலம் கடத்தி சென்று அங்கு கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர்.

இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறைக்கு தொடர் புகார்கள் வந்ததையடுத்து, காஞ்சீபுரம்-அரக்கோணம் சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டபோது, காஞ்சீபுரத்தைச் சேர்ந்த பாரதிதாசன் (வயது 30) என்பவரது மோட்டார்சைக்கிளில் இருந்த மூட்டையை சோதனை செய்தபோது ரேஷன் அரிசி என தெரிந்தது.

இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், பார்த்திபன் (47), ராஜேஷ் (38) ஆகியோருடன் கூட்டுச் சேர்ந்து வெளிமாநிலங்களுக்கு கடத்த 2 டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

Next Story