ஊட்டி, குன்னூர் பகுதிகளில் நகராட்சி மார்க்கெட்டில் சுழற்சி முறையில் கடைகள் திறப்பு
ஊட்டி, குன்னூர் பகுதிகளில் உள்ள நகராட்சி மார்க்கெட்டில் சுழற்சி முறையில் கடைகள் திறக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி
ஊட்டி, குன்னூர் பகுதிகளில் உள்ள நகராட்சி மார்க்கெட்டில் சுழற்சி முறையில் கடைகள் திறக்கப்பட்டு உள்ளது.
திறக்க அனுமதி
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் 1,300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு கடைகள் நெருக்கமாக உள்ளதால் ஊரடங்கு தளர்வில் திறக்க கடந்த 2 வாரங்களாக தடை விதிக்கப்பட்டது. இதனால் மார்க்கெட்டில் கடை வைத்து உள்ள வியாபாரிகள் நடமாடும் வாகனங்கள் மற்றும் நடைபாதைகளில் காய்கறி, பழங்கள், மளிகை பொருட்களை விற்பனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் பல்வேறு தளர்வுகள் அமலுக்கு வந்தது. ஆனால், மார்க்கெட் திறக்க அனுமதி இல்லை. இதை தொடர்ந்து வியாபாரிகள் வியாபாரம் பாதிப்பதாகவும், மார்க்கெட்டை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
அதன் பின்னர் கலெக்டர் அறிவுரைப்படி நகராட்சி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நகராட்சி மார்க்கெட்டில் சுழற்சி முறையில் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது
இந்தநிலையில் நேற்று காலையில் நகராட்சி அதிகாரிகள் மார்க்கெட் கடைகளுக்கு ஏ, பி, சி என ஸ்டிக்கர் ஒட்டினர். அரசு மூலம் அனுமதிக்கப்பட்ட காய்கறி, மளிகை, பழங்கள், காலணி விற்பனை செய்யும் கடைகள், டீக்கடைகள், இறைச்சி கடைகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
நேற்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கடைகள் திறக்கப்பட்டது. துணிக்கடைகள் திறக்க அனுமதி இல்லை. ஏற்கனவே, ரேஷன் கடைகள், நாட்டு மருந்து கடைகள், அரிசி மொத்த விற்பனை கடைகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
முதல்நாளில் ஏ ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட 400-க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்பட்டது. பொதுமக்கள் ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், குறிப்பிட்ட இடைவெளியில் கடைகள் திறந்திருக்க சுழற்சி முறையை வியாபாரிகள் கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்கி செல்ல வேண்டும். விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
குன்னூர்
குன்னூர் நகராட்சி மார்க்கெட்டில் 800 கடைகள் உள்ளன. இங்கும் வியாபாரிகளின் கோரிக்கையை தொடர்ந்து நகை மற்றும் துணி கடைகள் தவிர ஏ, பி, சி என்ற சுழற்சி முறையில் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. வியாபாரிகள் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும், கடைகளுக்கு முன்புறம் சானிடைசர் வைத்து இருக்க வேண்டும்,
வியாபாரிகளும் பொது மக்களும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள் வைக்கப்பட்டுள்ளன. கடைகள் சுழற்சி முறையில் திறக்கப்படுவதை தொடர்ந்து நகராட்சியின் மூலம் கடைகளுக்கு குறியீடு செய்தல், கிருமி நாசினி தெளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
Related Tags :
Next Story