ஈரோட்டில் பெட்ரோல் விலை 101 ரூபாயை நெருங்கியது


ஈரோட்டில் பெட்ரோல் விலை 101 ரூபாயை நெருங்கியது
x
தினத்தந்தி 30 Jun 2021 5:19 AM IST (Updated: 30 Jun 2021 5:19 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் பெட்ரோல் விலை 101 ரூபாயை நெருங்கி உள்ளது.

ஈரோடு
ஈரோட்டில் பெட்ரோல் விலை 101 ரூபாயை நெருங்கி உள்ளது.
பெட்ரோல் விலை
இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை கட்டுக்குள் அடங்காமல் உயர்ந்து வருவதால் ஏற்கனவே இந்தியாவில் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-ஐ தாண்டி உள்ளது.
தமிழ்நாட்டிலும் பெட்ரோல் விலை உயர்வு சதம் அடித்து சாதனை படைத்தது. மலைப்பகுதி மாவட்டமான நீலகிரியில் முதன் முதலில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தொட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.
101 ரூபாயை நெருங்கியது
ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாகவே இருந்தது  ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த மாத (ஜூன்) தொடக்கத்தில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.97 என்ற விலையில் விற்பனையானது. தொடர்ந்து படிப்படியாக விலை உயர்ந்து வந்தது. கடந்த 27-ந் தேதி ஈரோடு மாவட்டத்தில் பெட்ரோல் விலை சதம் அடித்தது. இங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் 6 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று ஒரே நாளில் லிட்டருக்கு 31 பைசா விலை அதிகரித்து உள்ளது. இதனால் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 37 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 101 ரூபாயை நெருங்கி உள்ளது.
விலை உயர்வு
பெட்ரோலுக்கு போட்டியாக டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.04-க்கு விற்பனையானது. நேற்று 27 பைசா அதிகரித்து ரூ.94.31-க்கு விற்பனையானது.
தொடர்ந்து பெட்ரோல்- டீசல் விலை அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்து வருகின்றன.

Next Story