கொரோனாவால் உயிரிழந்த தந்தையின் சொத்துகள் அபகரிப்பு; மீட்டுத்தரக்கோரி மகன்கள் மனு


கொரோனாவால் உயிரிழந்த தந்தையின் சொத்துகள் அபகரிப்பு; மீட்டுத்தரக்கோரி மகன்கள் மனு
x
தினத்தந்தி 30 Jun 2021 5:20 AM IST (Updated: 30 Jun 2021 5:20 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் உயிரிழந்த தந்தையின் சொத்துகள் அபகரிப்பு; மீட்டுத்தரக்கோரி மகன்கள் மனு

ஈரோடு
கொரோனாவால் உயிரிழந்த தந்தையின் சொத்துக்களை அபகரிப்பவரிடம் இருந்து மீட்டுத்தரக்கோரி அவருடைய மகன்கள் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
தந்தை-மகன்கள்
ஈரோடு 46 புதூர் பெரிய செட்டிபாளையம் ஸ்ரீ சக்தி கார்டன் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருடைய மகன்கள் ஸ்ருதிக், மவுனிஷ் ஆகியோர் நேற்று ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
எங்களது அப்பா ரமேஷ், அம்மா சாந்தி கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்று விட்டனர். நாங்கள் இருவரும் அம்மாவின் பாதுகாப்பில் இருந்து வருகிறோம். எங்களது அம்மா தையல் வேலை செய்தும், ஜவுளி கடையில் வேலை பார்த்தும் எங்களை படிக்க வைத்து வருகிறார். எங்கள் அம்மா, அப்பா இருவருமே வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை. மகன்களாகிய நாங்கள் இருவரும் அவ்வப்போது அப்பா ரமேஷை பார்த்து விட்டு வருவோம். இதற்கு அம்மா ஒரு போதும் தடை விதித்தது கிடையாது. எங்களது அப்பாவுடன் இருந்த அவரது நண்பர்கள் சிலர் எங்களை அவரிடம் நெருங்க விடவில்லை.
கொரோனாவால் மரணம்
இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு எனது அப்பா ரமேஷ், தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் (மே) 30-ந் தேதி உயிர் இழந்தார். தகவல் தெரிந்து மருத்துவமனைக்கு சென்றபோது அன்று இரவு 9 மணிக்குதான் உடலை தருவதாக கூறினர்.
ஆனால், மாலை 4 மணிக்கே அப்பாவின் நண்பர்கள் உடலை பெற்றுக்கொண்டனர். எங்கள் அப்பாவின் முகத்தை இறுதியாக பார்ப்பதற்கும், இறுதி சடங்கு செய்வதற்கும் ஈரோடு ஆத்மா மின் மயானத்திற்கு சென்றபோது, எங்களை இறுதி சடங்கு செய்ய அனுமதிக்கவில்லை.
சொத்துகள் அபகரிப்பு
எங்களது தந்தை உயிரிழந்த பிறகு அவரது நண்பர் ஒருவர், எங்களது அப்பா நடத்தி வந்த ஸ்டேஷனரி கடை, ஜெராக்ஸ் கடை, ஐஸ்கிரீம், குழந்தைகள் ஆடையகம் போன்றவற்றை அபகரித்து பொருட்களை எடுத்து வருகிறார். எங்கள் தந்தையின் வாரிசு என்ற முறையில் கடையை ஒப்படைக்காமல் அதை அபகரிக்கும் நோக்கில் செயல்படும் நபரிடம் இருந்து எங்கள் தந்தைக்கு சொந்தமான அசையும், அசையாத சொத்துகளை மீட்டு எங்களுக்கு வழங்குவதுடன், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளனர்.

Related Tags :
Next Story