ஈரோட்டில் உள்ள தனியார் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் சோதனை- தரமற்ற உணவுகள் அழிப்பு


ஈரோட்டில் உள்ள தனியார் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் சோதனை- தரமற்ற உணவுகள் அழிப்பு
x
தினத்தந்தி 30 Jun 2021 5:20 AM IST (Updated: 30 Jun 2021 5:20 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் உள்ள தனியார் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி திடீர் சோதனை செய்து தரமற்ற உணவுகளை அழிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஈரோடு
ஈரோட்டில் உள்ள தனியார் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி திடீர் சோதனை செய்து தரமற்ற உணவுகளை அழிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதிகாரிகள் சோதனை
ஈரோடு பிரப் ரோடு (மீனாட்சி சுந்தரனார் சாலை) பகுதியில் பிரபல அசைவ மற்றும் சைவ ஓட்டல்கள் இயங்கி வருகின்றன. இந்த ஓட்டல்களில் நேற்று ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அதிகாரி டாக்டர் தங்க விக்னேஷ் தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த தளர்வுகள் மூலம் ஓட்டல்கள் திறக்க அனுமதி இருந்தாலும் பார்சல் சேவை மட்டுமே நடைபெற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் பார்சல் மூலம் வழங்கப்படும் உணவுகளில் தரம் இருப்பதில்லை என்று பல்வேறு தரப்பினரிடமும் இருந்து புகார்கள் வந்ததால் தமிழக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை துறை இயக்குனர் உத்தரவின்பேரில் இந்த சோதனை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமையல் பொருட்கள்
ஓட்டலுக்குள் சென்ற அதிகாரிகள் சமையல் அறை, பொருட்கள் பாதுகாத்து வைக்கும் அறை, சமையலுக்கு வைக்கப்பட்டு இருந்த காய்கறிகள், சமையல் அறையில் சமையலர்கள் மற்றும் பணியாளர்கள் செயல்படும் விதம், மசாலா பொருட்கள் உள்ளிட்ட உணவு தயாரிக்கும் பொருட்கள், ஓட்டலில் வைக்கப்பட்டு இருந்த குளிர்சாதன பெட்டிகள் என்று அனைத்து பகுதிகளையும் சோதனையிட்டனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி டாக்டர் தங்க விக்னேஷ் கூறியதாவது:-
5 ஓட்டல்கள்
ஊரடங்கு காரணமாக மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஓட்டல்கள் திறக்கப்பட்டு உள்ளன. பார்சல் சேவை என்ற நிலை இருப்பதால் பொதுமக்கள் ஓட்டல்களுக்குள் வந்து பார்க்கும் நிலையும் இல்லை. எனவே ஓட்டல்களில் தரமற்ற பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் பாதிப்புகள் ஏதும் வந்து விடக்கூடாது என்ற முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் உள்ள உணவகங்களில் சோதனை நடத்த தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை இயக்குனர் செந்தில்குமார் உத்தரவிட்டு உள்ளார். அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி ஆலோசனையின் பேரில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில் சோதனை தொடங்கி இருக்கிறோம்.
முதல் கட்டமாக 5 ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த 5 ஓட்டல்களிலும் உரிமம் உள்ளது. 3 ஓட்டல்களில் காலாவதியான உணவுப்பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. இன்னும் ஓரிரு ஓட்டல்களில் சமைத்த உணவுப்பொருட்கள் மீண்டும் சமைத்து வழங்கும் வகையில் குளிர்சாதன பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்தன. இவ்வாறு வைக்கப்பட்டு இருந்த உணவுகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டு விட்டன.
அறிவுரைகள்
இந்த சோதனைக்கு பின்னர் ஓட்டல்களுக்கு சில அறிவுரைகள் வழங்கப்பட்டு இருப்பதுடன், எச்சரிக்கையும் வழங்கப்பட்டு இருக்கிறது. ஓட்டல்களில் உள்ள சில குறைபாடுகள் சுட்டிகாட்டப்பட்டு அவற்றை களைந்து மேம்படுத்த போதிய நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி ஓட்டல்களில் பணிசெய்யும் சமையலர்கள், பரிமாறுபவர்கள், பார்சல் சேவை மற்றும் பில் தொகை வசூலிப்பவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை சான்று (பிட்னஸ் சர்ட்டிபிகேட்) பெற அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ஓட்டல்களில் பூச்சிகளை கட்டுப்படுத்த உணவு பாதுகாப்பு துறையால் பரிந்துரைக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் உரிய கருவிகள் அமைக்கவேண்டும். உணவு பாதுகாப்புத்துறையின் சான்று பெற்ற நிறமூட்டிகள், சமையல் பொருட்கள் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். காய்கறிகள் தனியாகவும், இறைச்சி தனியாகவும் குளிர்சாதன பெட்டிகளில் வைக்கப்பட வேண்டும். சைவ, அசைவ உணவுகள் ஒரே குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. எந்த சூழலிலும் வேக வைத்த இறைச்சி மற்றும் காய்கறிகள் குளிர்சாதன பெட்டியில் வைப்பது தவறான நடவடிக்கையாகும் என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் எடுத்துக்கூறப்பட்டு உள்ளன.
புகார் தெரிவிக்கலாம்
இதுபோன்று மாவட்டம் முழுவதும் அனைத்து உணவகங்களிலும் தொடர் சோதனை நடைபெறும். பொதுமக்கள் உணவுப்பொருட்கள் தொடர்பான குறைபாடுகள் மற்றும் புகார்களை 94440 42322 என்ற செல்போன் எண்ணுக்கு தெரிவிக்கலாம்.
இவ்வாறு மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரி டாக்டர் தங்க விக்னேஷ் கூறினார்.
ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனை நடத்தியது ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story