ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வுப்பணியில் ஈடுபட்டார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வுப்பணியில் ஈடுபட்டார்.
கலெக்டர் ஆய்வு
ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி பொறுப்பு ஏற்றது முதல் மாவட்டம் தோறும் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தொடர் ஆய்வுப்பணிகள் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று சத்தியமங்கலம் தாலுகா பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார். சத்தியமங்கலம் அருகே உள்ள சதுமுகை பகுதிக்கு சென்ற அவர் அங்குள்ள சின்னட்டிபாளையம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நாற்றாங்கால் பண்ணையினை பார்வையிட்டார். நாற்றாங்கால் பண்ணையில் வளர்க்கப்பட்டு வரும் மரக்கன்றுகள், அவற்றை நடவு செய்யும் முறை, யார் யாருக்கு வழங்கப்படுகிறது என்பது குறித்து கலெக்டர் கேட்டு அறிந்தார்.
சத்தியமங்கலம் கொமராபாளையத்தில் உள்ள ராகவேந்திரா கல்லூரியில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தையும் கலெக்டர் நேற்று பார்வையிட்டார். அங்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகள் மற்றும் அங்கு பணியில் இருக்கும் டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார்.
அதிகாரிகளுக்கு உத்தரவு
மேலும் சதுமுகை ஊராட்சி சார்பில் மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளையும் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டார். கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான நரசபுரத்துக்கு கலெக்டர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு உள்ள பொதுமக்களுக்கு வழங்கப்படும் உதவிகள், நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்டு அறிந்தார். மேலும், அரசின் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கொமராபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அங்கு கொரோனா சிகிச்சைகள் குறித்து மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டு, கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளும் வழங்கினார்.
சோதனைச்சாவடி
இதுபோல் பண்ணாரி வாகன சோதனைச்சாவடிக்கு சென்ற கலெக்டர் அங்கு போலீசார் மேற்கொண்டு வரும் வாகன தணிக்கை குறித்து ஆய்வு செய்தார். கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்களில் மேற்கொள்ள வேண்டிய தணிக்கைகள், கர்நாடகாவுக்கு செல்லும் வாகனங்கள் மீதான கண்காணிப்பு உள்ளிட்டவை குறித்து அவர் போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார். பின்னர் ராஜன் நகர் பகுதிக்கு சென்ற கலெக்டர், தமிழ்நாடு கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குய்யனூர் முதல் சங்ககிரி செட்டியார் தோட்டம்வரை சாலை பலப்படுத்தும் பணிகளை பார்வையிட்டு சோதனை செய்தார்.
இதுபோல் சிக்கரசம்பாளையம் ஊராட்சியில் உள்ள ராமபையலூர் பழங்குடியினர் காலனிக்கு சென்ற கலெக்டர் அங்கு பசுமை வீடுகள் திட்டத்தில் கட்டப்படும் வீடுகளை பார்வையிட்டார். அந்த வீடுகளை கட்டி வரும் பயனாளிகளிடம் நிதி உதவி மற்றும் கட்டுமான பொருட்கள் விலை, பணி தொடங்கப்பட்ட காலம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து கேட்டு அறிந்தார்.
அப்போது சத்தியமங்கலம் தாசில்தார் ரவிஷங்கர், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அப்துல் வகாப், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமாலா,குமராபாளையம் ஊராட்சி தலைவர் எஸ்.எம்.சரவணன், சதுமுகை ஊராட்சி தலைவர் சத்யா சிவராஜ் உள்பட பலர் இருந்தனர்.
Related Tags :
Next Story