ஊரடங்கு தளர்வால் ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் சந்தை திறப்பு
ஈரோட்டில் ஊரடங்கு தளர்வு காரணமாக ஸ்டோனி பாலம் மீன் சந்தை திறக்கப்பட்டது.
ஈரோடு
ஈரோட்டில் ஊரடங்கு தளர்வு காரணமாக ஸ்டோனி பாலம் மீன் சந்தை திறக்கப்பட்டது.
மீன் சந்தைகள்
ஈரோடு மாநகர் பகுதியில் கருங்கல்பாளையம் மற்றும் சூரம்பட்டி நால்ரோடு அருகே மணல்மேடு ஸ்டோனிபாலம் பகுதி ஆகிய இடங்களில் மீன் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஸ்டோனிபாலம் சந்தையில்தான் கடல் மீன்கள் அதிகம் கிடைக்கும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. ராமேசுவரம், தூத்துக்குடி மற்றும் கேரளாவில் இருந்து இங்கு மீன்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மீன் பிரியர்கள் அதிக அளவில் இங்கு வருகிறார்கள்.
கொரோனா ஊரடங்கு 2-ம் அலை காரணமாக மீன் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு இருப்பதால் மீன் விற்பனை மீண்டும் தொடங்கி இருக்கிறது.
48 நாட்களுக்கு பிறகு திறப்பு
ஏற்கனவே கருங்கல்பாளையம் மீன் மார்க்கெட் செயல்பட தொடங்கிய நிலையில், நேற்று ஸ்டோனிபாலம் மீன் சந்தையும் இயங்க தொடங்கியது. இருப்பினும் மீன் சந்தையில் கடைபிடிக்கப்பட வேண்டிய கட்டுப்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்து உள்ளனர். அதன்படி சமூக இடைவெளியுடன் கடைகள் அமைக்கப்பட்டன. வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள், மீன் வாங்க வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து இருக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.
இதுபற்றி வியாபாரி ஒருவர் கூறும்போது, 2-வது அலை ஊரடங்கு காரணமாக 48 நாட்களுக்கு பிறகு மீன்கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. இங்கு மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்து உள்ள கட்டுப்பாடுகளை கடைபிடித்து பொதுமக்கள் மீன் வாங்க வரவேண்டும். மீண்டும் பிரச்சினைகள் வந்து கடைகள் அடைக்கப்பட்டால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.
எதிர்பார்ப்பு
மீண்டும் மீன் கடைகள் திறக்கப்பட்டதையொட்டி இடைவெளிக்காக வட்டங்கள் போடப்பட்டு உள்ளன. முகக்கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீன் சந்தை திறந்தாலும் நேற்று மக்கள் கூட்டம் குறைந்த அளவிலேயே இருந்தது. இன்று (புதன்கிழமை) முதல் வியாபாரம் சூடு பிடிக்கும் என வியாபாரிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
Related Tags :
Next Story