ஆண்டு முழுவதும் நெசவாளர்களுக்கு வேலை கிடைக்க நடவடிக்கை; சென்னிமலையில் நடந்த விழாவில் கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி பேச்சு


ஆண்டு முழுவதும் நெசவாளர்களுக்கு வேலை கிடைக்க நடவடிக்கை; சென்னிமலையில் நடந்த விழாவில் கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி பேச்சு
x
தினத்தந்தி 29 Jun 2021 11:51 PM GMT (Updated: 29 Jun 2021 11:51 PM GMT)

ஆண்டு முழுவதும் நெசவாளர்களுக்கு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னிமலையில் நடந்த கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கைத்தறி துறை ஆர்.காந்தி பேசினார்.

சென்னிமலை
ஆண்டு முழுவதும் நெசவாளர்களுக்கு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னிமலையில் நடந்த கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி பேசினார்.
நலத்திட்ட உதவிகள் 
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள சென்குமார் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் நெசவாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆகியவை நேற்று நடந்தது. 
விழாவுக்கு ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை முதன்மை செயலாளர் அபூர்வா, கைத்தறி துறை ஆணையர் பீலா ராஜேஷ், கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு கைத்தறி துறை உதவி இயக்குனர் சரவணன் வரவேற்று பேசினார். 
கோரிக்கைகள் 
விழாவில் தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு நெசவாளர்களுக்கு கைத்தறி உபகரணங்களையும், 4 பேருக்கு ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் உதவித்தொகையையும் வழங்கினார்.
முன்னதாக விழாவில் அமைச்சர் ஆர்.காந்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
 அந்தந்த துறை அமைச்சர்கள் மக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி முதலில் சென்னிமலையில் தான் நெசவாளர் குறைகளை கேட்க வந்துள்ளோம். தி.மு.க ஆட்சியில்தான் நெசவாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இனி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெசவாளர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். மேலும் கடந்த 10 ஆண்டுகளாக நடக்காத பணிகள் இனி விரைவாக நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். 
ஆய்வு
தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில், ‘முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் அனைத்து தொழில்களையும் பாதுகாக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். தமிழக அரசு இதுவரை கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் வளர்ச்சி பணிகளுக்காக அனைத்து துறைகளிலும் ஆய்வு செய்ய மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதில் முதல் ஆய்வு கூட்டம் சென்னிமலையில் தொடங்கியுள்ளது. கைத்தறி நெசவாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.இதையொட்டி அமைச்சர்கள் ஆர்.காந்தி, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் சென்டெக்ஸ் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் கைத்தறி துணி ரகங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
விழாவில் சென்னிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.காயத்ரி இளங்கோ, துணைத்தலைவர் பன்னீர்செல்வம், திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் இல.பத்மநாபன், மாவட்ட கவுன்சிலரும், சென்னிமலை மேற்கு ஒன்றிய தி.மு.க பொறுப்பாளருமான எஸ்.ஆர்.எஸ்.செல்வம், சென்னிமலை ஒன்றிய தி.மு.க பொறுப்பாளர்கள் பி.செங்கோட்டையன் (வடக்கு), சி.பிரபு (கிழக்கு), முன்னாள் கோ- ஆப்டெக்ஸ் இயக்குனர் சா.மெய்யப்பன், நகர செயலாளர் எஸ்.எம்.ராமசாமி, குமாரவலசு ஊராட்சி தலைவர் வி.பி.இளங்கோ, மேற்கு ஒன்றிய இளைஞர் அணியை சேர்ந்த கொடுமணல் கோபால் மற்றும் கூட்டுறவு சங்க தலைவர்கள், நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story