தனியார் பள்ளிகளுக்கு எதிரான வழக்குக்கு பதில் அளிக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


தனியார் பள்ளிகளுக்கு எதிரான வழக்குக்கு பதில் அளிக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 30 Jun 2021 4:55 PM IST (Updated: 30 Jun 2021 4:55 PM IST)
t-max-icont-min-icon

கல்வி கட்டண பாக்கியை கேட்டு வற்புறுத்தக் கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எதிரான வழக்குக்கு பதில் அளிக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் மகேந்திரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கொரோனா ஊரடங்கால் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கான கல்விக்கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை நிர்ப்பந்திக்கக் கூடாது. கட்டணம் செலுத்தாத மாணவர்களின் கல்வியில் இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்று பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் இந்த உத்தரவை பல தனியார் பள்ளிகள் மீறுகின்றன. நடப்பு கல்வியாண்டுக்கான ஆன்லைன் வகுப்பில் மாணவர்கள் கலந்துகொள்ள, கடந்த கல்வி ஆண்டு கட்டண பாக்கியை செலுத்தும்படி மாணவர்களின் பெற்றோரை வற்புறுத்துகின்றன.

எனவே, கல்வி கட்டண பாக்கியை கேட்டு பெற்றோரை வற்புறுத்தக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ளத் தேவையான உபகரணங்களையும், இணையதள வசதியையும் அரசு வழங்க வேண்டும். ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்வதால், அந்த மாணவர்களின் கண்களை பரிசோதனை செய்யவும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், வழக்குக்கு தமிழக அரசு அடுத்த வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Next Story