தாளவாடி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
தாளவாடி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தாளவாடி
தாளவாடி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆழ்குழாய் மூலம்
தாளவாடி அருகே உள்ளது கும்டாபுரம் கிராமம். இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். மேலும் இங்குள்ள மக்களுக்கு ஊராட்சி சார்பில் ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீர் வழங்கப்பட்டுவந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் இல்லாமல் இப்பகுதிமக்கள் கடும் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதுபற்றி ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதனால் அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாளவாடி போலீசார் சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் போலீசாரிடம் கூறுகையில், ‘கடந்த ஒருவாரமாக எங்கள் பகுதியில் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை.
போக்குவரத்து பாதிப்பு
மேலும் ஊராட்சி தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இங்கு வந்து குடிநீர் பிரச்சினையை தீர்ந்து வைத்தால் மட்டுமே சாலைமறியலை கைவிடுவோம்’ என்று தெரிவித்தனர்’. அதற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராசப்பன், ‘பழுதடைந்த மின்மோட்டாரை உடனடியாக சரி செய்து உங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்கப்படும்’ என்றார். அதை ஏற்று கொண்ட பெண்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story