ஈரோடு மாவட்டத்தில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏறுமுகம்
இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல்-டீசல் விலை ஏறுமுகமாகவே உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
பெருந்துறை
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து பெருந்துறை தினசரி மார்க்கெட் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாநில செயலாளர் சின்னச்சாமி, பெருந்துறை ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் தெய்வசிகாமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் குப்புசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அந்தியூர்
இதேபோல் அந்தியூரில் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நம்பியூர்
நம்பியூரில் பஸ் நிலையம் முன்பு நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நம்பியூர் ஒன்றிய தமிழர் கட்சி தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் பரமேஸ்வரன், முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் ஸ்டாலின் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதில் பவானிசாகர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் சுப்பிரமணியம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த வடக்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் பெரியகாளையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி அருகே உள்ள பெரிய புலியூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பவானி ஒன்றிய துணை செயலாளர் பி.எஸ்.பழனிச்சாமி தலைமை தாங்கினார்.
இதில் கட்சி நிர்வாகிகள் டி.கண்ணன், எஸ்.மாணிக்கம், வக்கீல் வி.ஜி.அருள், பொன்னுசாமி, சின்னுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தாளவாடி
தாளவாடியில் பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளூவன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட கட்சியினர் கோஷங்கள் போட்டனர். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
பவானி
பவானி, ஜம்பை, சேர்வராயன்பாளையம் உள்பட 13-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் டி.ஏ.மாதேஸ்வரன், வக்கீல் ப.பா மோகன், பவானி நகர செயலாளர் வக்கீல் பாலமுருகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொறுப்பாளர்கள் பழனிச்சாமி வக்கீல் சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பவானி ஜமுக்காளம் மற்றும் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சித்தையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொறுப்பாளர்கள் ஜெகநாதன், மாணிக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கொடுமுடி
கொடுமுடி புதிய பஸ் நிலையம் முன்பு பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட துணை தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த கனகவேல், சண்முகவள்ளி, குணசேகரன், ராஜு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story