பவானி, கோபி பகுதியை சேர்ந்த 18 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்


பவானி, கோபி பகுதியை சேர்ந்த 18 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்
x
தினத்தந்தி 30 Jun 2021 9:40 PM GMT (Updated: 30 Jun 2021 9:40 PM GMT)

பவானி, கோபி பகுதியை சேர்ந்த 18 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.

பவானி
பவானி, கோபி பகுதியை சேர்ந்த 18 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.
அமைச்சர் ஆய்வு
பவானி ஜம்பை ரோட்டில் உள்ள அரசினர் மகளிர் தங்கும் விடுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்தார். பின்னர் அவர் பவானி அந்தியூர் பிரிவு அருகே உள்ள ஆதிதிராவிடர், மற்றும் அருந்ததியர் சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்கு சென்று ஆய்வில் ஈடுபட்டார். அப்போது அவர் பொதுமக்களிடம் இருந்து அடிப்படைத் தேவைகள், வேலைவாய்ப்பு மற்றும் வங்கி கடன் குறித்த மனுக்களை பெற்றுக்கொண்டார்.
மேலும் பவானி, கோபி, அந்தியூர், குப்பாண்டம்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 18 பேருக்கு ஆடு, மாடு வளர்த்தல் மற்றும் வாகன கடன் என பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கான காசோலைகளை வழங்கினார். 
தொற்று குறைந்துள்ளது
அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதன் விளைவாக தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.
தற்போது ஒவ்வொரு அமைச்சரும் அந்தந்த துறை சார்ந்த பணிகளை பார்வையிட வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டதை தொடர்ந்து பவானியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான பெண்கள் நல விடுதியில் ஆய்வு செய்தேன். இதில் விடுதிக்கு தேவையான குடிநீர் தொட்டி மற்றும் சமையலர் தேவை என்பதை அறிந்து, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளேன்.
ஆங்கில வழிக்கல்வி
அதேபோல் மாணவிகள் தங்கும் விடுதி அருகே உள்ள டாஸ்மாக் கடையை நீக்க வேண்டும். விடுதியை சுற்றிலும் உள்ள சுற்றுச்சுவர்களின் உயரத்தை உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்பேரில் இந்த கோரிக்கைகள் அனைத்தும் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும்.
ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு தேவையான கல்வி முழுமையாக சென்றாலே அந்த சமூகம் மேம்பாடு அடையும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிக்கூடங்களில் இதுவரை தமிழ் வழிக்கல்வி மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த நிலையில் இனிமேல் ஆங்கில வழிக்கல்வி வழங்கவும் முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். பஞ்சமி நிலம் குறித்த புகாரின் பேரில் ஆய்வு நடத்தி வரப்படுகிறது. மேலும் இதுகுறித்து விரைவில் முதல்-அமைச்சர் தலைமையில் நல்ல முடிவு எட்டப்படும்.
இவ்வாறு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கூறினார்.
முன்னதாக நடந்த இந்த ஆய்வின் போது அமைச்சருடன் பயிற்சி கலெக்டர் பிரிட்டோ தயாள், பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் மாரிமுத்து, பவானி நகராட்சி பொறியாளர் கதிர்வேலு, ஆகியோர் உடன் சென்றனர்.
நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் என்.நல்லசிவம், அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., பவானி நகர செயலாளர் ப.சீ.நாகராஜன், முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் என்.தவமணி, மாவட்ட இலக்கிய அணி பொறுப்பாளர்கள் அன்பழகன், முருகேசன், முன்னாள் நகர்மன்ற தலைவர் எம்.ஆர்.துரை, வக்கீல் செந்தில் குமரன், முன்னாள் கவுன்சிலர் சுப்பிரமணி செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story