தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் தவணை தொகையை செலுத்துமாறு கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை


தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் தவணை தொகையை செலுத்துமாறு கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 1 July 2021 8:45 PM IST (Updated: 1 July 2021 8:45 PM IST)
t-max-icont-min-icon

தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள், கடன் தவணை தொகையை செலுத்த கட்டாயப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தஞ்சாவூர், 

கொரோனா தொற்று 2-வது அலை பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் வங்கிகள் மற்றும் நுண் நிதி கடன் வழங்கும் நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வழங்கிய கடன் தவணை தொகையை திரும்ப செலுத்த கேட்டு வலியுறுத்தி வருவதாக பல்வேறு இடங்களில் இருந்து தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்கு புகார்கள் வந்தன.

இதனையடுத்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அனைத்து வங்கியாளர்கள் மற்றும் நுண்நிதி கடன் நிறுவனங்களின் மேலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

கொரோனோ ஊரடங்கு நடைமுறையில் உள்ள காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் கருதி அனைத்து தனியார் வங்கிகள் மற்றும் நுண் நிதி கடன் நிறுவனங்கள் கடன் தவணை தொகையினை நிர்பந்தம் செய்து வசூல் செய்யும் கடின போக்கினை தவிர்த்திட வேண்டும். மேற்படி தனியார் வங்கிகள் மற்றும் நுண்நிதி நிறுவனங்கள் தற்போது தவணைத்தொகை செலுத்த கட்டாயப்படுத்தாமல் கால அவகாசம் அளிக்க வேண்டும்.

அந்த நிலுவைத்தொகைக்கு கூடுதல் வட்டி வசூலிப்பதை தவிர்க்க வேண்டும். இது தொடர்பாக மாவட்ட அளவில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் மகளிர் திட்ட அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் திரும்ப செலுத்தும் கால அட்டவணையை மாற்றி அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இது தொடர்பாக எந்த புகார்களுக்கும் இடம் அளிக்காத வகையில் செயல்பட வேண்டும். இதையும் மீறி புகார்கள் எதேனும் எழும் பட்சத்தில் இச்செயல் தற்போது அரசு விதித்துள்ள ஊரடங்கு நடைமுறைகளை மீறிய செயலாக கருதப்பட்டு தொடர்புடைய அனைத்து தனியார் வங்கிகள் மற்றும் நுண் நிதி கடன் நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல மேலாளர் லட்சுமி நரசிம்மன், பாரத மாநில வங்கி மண்டல மேலாளர் ஆல்வின் மார்டின் ஜோசப், கனரா வங்கி மண்டல மேலாளர் ஜெயக்குமார், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் ஆசீர்வாதம், மோகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சீனிவாசன் மற்றும் நுண்நிதி கடன் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Next Story