மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த மழை
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று மழை கொட்டி தீர்த்தது.
திண்டுக்கல்:
பலத்த மழை
திண்டுக்கல்லில் கடந்த பல நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்தது. தென்மேற்கு பருவமழை காலம் என்றாலும் அனல் காற்றே பொதுமக்களுக்கு பரிசாக கிடைத்தது. இரவில் மின்விசிறிகளும் குளுமைக்கு பதிலாக அனல் காற்றையே கக்கியது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மதிய நேரத்தில் பொதுமக்கள் வெளியே வருவதையே தவிர்த்தனர்.
விவசாயிகளோ பயிர் சாகுபடி பணிகளை தொடங்கிவிட்டனர். ஆனால் பருவமழை பெய்யவில்லையே வருண பகவான் கருணை காட்ட மாட்டாரா? என்ற ஏக்கத்திலேயே காத்திருந்தனர்.
அவர்களின் மனதை குளிர்விக்கும் வகையில் கடந்த 2 நாட்களாக திண்டுக்கல்லில் மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. அதிலும் நேற்று முன்தினம் இரவு இடி-மின்னலுடன் பெய்த மழை பொதுமக்களை மிரள வைத்தது.
குறிப்பிட்ட நேரத்தில் பயங்கர இடி சத்தம் கேட்டதே அதற்கு காரணம். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் இந்த மழை கொட்டி தீர்த்தது. அதன் பிறகு சாரல் மழையாக தொடர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது. இதன் காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இடி-மின்னல் இல்லாமல் மழை பெய்ததால் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
கொடைக்கானல்
இதேபோல் கொடைக்கானலிலும் நேற்று மழை பெய்தது. பகல் முழுவதும் வானில் கருமேக கூட்டங்கள் சூழ்ந்திருந்தன. ஆனால் மழை பெய்யவில்லை. பின்னர் மதியம் 3 மணி அளவில் பலத்த மழை பெய்தது. சுமார் 1Ñ மணி நேரம் இந்த மழை நீடித்தது.
இதன் காரணமாக நட்சத்திர ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறியது. மேலும் வெள்ளி நீர்வீழ்ச்சியிலும் வழக்கத்தைவிட வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்தது.
வனப்பகுதியில் உள்ள மண், செடிகளை மழைநீர் அடித்து வந்ததால் வெள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீர் பழுப்பு நிறமாக மாறியது. அதேபோல் பாம்பார் நீர்வீழ்ச்சி, பியர் சோழா அருவி போன்றவற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பின்னர் இரவில் இடி-மின்னலுடன் கூடிய லேசான சாரல் மழை பெய்தது. அத்துடன் கடும் குளிர்காற்றும் வீசியது.
பழனி
பழனி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் மாலை 5 மணி அளவில் திடீரென வானில் கருமேக கூட்டம் திரண்டு சாரல் மழையாக பெய்தது.
சிறிது நேரத்தில் அது பலத்த மழையாக மாறியது. சுமார் ஒரு மணி நேரம் இந்த மழை நீடித்தது. இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. மேலும் கோம்பைபட்டி, ஆயக்குடி, கணக்கன்பட்டி உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று மாலையில் மழை பெய்தது.
Related Tags :
Next Story