கொரோனா தடுப்பூசி நடமாடும் வாகனம்

கொரோனா தடுப்பூசி போடும் நடமாடும் வாகனத்தை கலெக்டர் அனிஷ் சேகர் நேற்று தொடங்கி வைத்தார்.
மதுரை, ஜூலை.
கொரோனா தடுப்பூசி போடும் நடமாடும் வாகனத்தை கலெக்டர் அனிஷ் சேகர் நேற்று தொடங்கி வைத்தார்.
நடவடிக்கைகள்
மதுரை மாநகராட்சி மற்றும் யங் இந்தியா, சி.ஐ.ஐ. நிறுவனம் இணைந்து கோவிட் தடுப்பூசி போடும் நடமாடும் வாகனத்தை உருவாக்கி உள்ளனர். இந்த வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் டாக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கலெக்டர் அனிஷ் சேகர், கோ.தளபதி எம்.எல்.ஏ. ஆகியோர் கொடியசைத்து வாகனத்தை தொடங்கி வைத்தனர்.
பின்னர் கலெக்டர் அனிஷ் சேகர் கூறியதாவது:-
மதுரை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் மற்றும் சி.ஐ.ஐ. நிறுவனம் சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக கோவிட் தடுப்பூசி நடமாடும் வாகனம் தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த நடமாடும் வாகனம் மார்க்கெட் பகுதிகள், மக்கள் அதிக அளவில் கூடும் இடங்கள், நகரப்பகுதிகள், ஊரகப் பகுதிகளுக்கு செல்லும். அங்கு அந்த அந்த பகுதி மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியினை மேற்கொள்ளும்.
முகாம்கள்
அரசு மற்றும் தனியார் அலுவலக பணிக்கு செல்லும் நபர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள இந்த நடமாடும் வாகனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த நடமாடும் மருத்துவ வாகனத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 250 நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தலாம். இதில் ஒரு மருத்துவர், இரண்டு செவிலியர்கள் பணியில் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி மருந்துகள் தினசரி வருகையின் அடிப்படையில் பொதுமக்களுக்கு தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்துவதில் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகள் அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, நகர்நல அலுவலர் மரு.குமரகுருபரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், சி.ஐ.ஐ. தலைவர் தியாகராஜன், துணை தலைவர் ஜெய்சிங்வர்கர், யங் இந்தியா தலைவர் பூர்ணிமாவெங்கடேஷ், உள்பட மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






