அவல்பூந்துறை, சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் இன்று முதல் விவசாய விளைபொருட்கள் ஏலம் தொடங்குகிறது
அவல்பூந்துறை, சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் விவசாய விளைபொருட்கள் ஏலம் தொடங்குகிறது.
ஈரோடு
அவல்பூந்துறை, சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் விவசாய விளைபொருட்கள் ஏலம் தொடங்குகிறது.
ஏல விற்பனை
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விவசாய விளைபொருட்கள் ஏல விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. எனவே ஊரடங்கில் இருந்தும் பல தளர்வுகள் ஈரோடு மாவட்டத்துக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாய விளைபொருட்கள் ஏல விற்பனையை தொடங்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
அவல்பூந்துறை-சிவகிரி
அதன்படி ஈரோடு அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் கொப்பரை தேங்காய் ஏலம் விற்பனை நடைபெற உள்ளது.
ஏல விற்பனையில் கலந்து கொள்ள வரும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்களுக்கு காய்ச்சல், சளி போன்ற கொரோனா அறிகுறி இருந்தால் வரவேண்டாம். விற்பனையில் பங்கு கொள்ளும் அனைவரும், கொரோனா இல்லை என்ற சான்று பெற்று வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுபோல் சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எள் ஏலம் நடக்கிறது. ஏலத்தில் பங்கேற்கும் விவசாயிகள் முன்னதாக டோக்கன் பெற வேண்டும்.
மைலம்பாடி-பெருந்துறை
பவானி அருகே உள்ள மைலம்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நாளை (சனிக்கிழமை) முதல் எள் ஏலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எள் ஏலத்தில் பங்கேற்க வரும் விவசாயிகள், முன்னதாக டோக்கன் பெற்று கொள்ள வேண்டும். டோக்கன் பெற்ற விவசாயிகள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும்.
பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நாளை (சனிக்கிழமை) கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏல விற்பனையில் பங்கேற்கும் விவசாயிகள் முன் பதிவு செய்யவேண்டும். பதிவின்போது விவசாயிகளுக்கு நேரம் ஒதுக்கப்படும். அந்த நேரத்தில் கொப்பரைகள் தரம் பிரித்து கொண்டு வர வேண்டும். டெண்டர் பதிவு செய்ய காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரையும், விவசாயிகள் ரத்து செய்யும் நேரம் மதியம் 1 மணி முதல் மதியம் 1.20 மணி வரையும் 20 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று விற்பனை சங்க அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story