ஆசனூர் அருகே வாகனம் மோதி சிறுத்தை சாவு


ஆசனூர் அருகே வாகனம் மோதி சிறுத்தை சாவு
x
தினத்தந்தி 2 July 2021 2:53 AM IST (Updated: 2 July 2021 2:53 AM IST)
t-max-icont-min-icon

ஆசனூர் அருகே வாகனம் மோதி சிறுத்தை இறந்தது.

தாளவாடி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதி வழியாக திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதனால் அந்த வழியாக எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருப்பதால் குறைவான வாகனங்களே செல்கின்றன. மேலும் வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவை தேடி வனச்சாலையை கடப்பது வழக்கம்.
இந்த நிலையில் ஆசனூரில் சாலையை கடந்த சிறுத்தை மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியது. இதில் பலத்த அடிபட்ட சிறுத்தை சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தது. இதுகுறித்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஆசனூர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் இறந்து கிடந்த சிறுத்தையின் உடலை பார்வையிட்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டார். அவர் சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். அதனை தொடர்ந்து சிறுத்தையின் உடல் வனப்பகுதியிலேயே எரியூட்டப்பட்டது.

Next Story