கவுந்தப்பாடி, சத்தி பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; மரங்கள் வேரோடு சாய்ந்தன
கவுந்தப்பாடி, சத்தியமங்கலம் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
ஈரோடு
கவுந்தப்பாடி, சத்தியமங்கலம் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் மாலை 4.30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 5.30 மணி வரை சுமார் 1 மணி நேரம் பலத்த மழையாக கொட்டியது. அப்போது பலத்த சூறாவளிக்காற்றும் வீசியது. இந்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஈரோடு-சத்தி ரோட்டில் பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி அருகே வேப்ப மரம் வேரோடு சாய்ந்து நடுரோட்டில் விழுந்தது.
இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. இதுபற்றி அறிந்ததும் கவுந்தப்பாடி போலீசார் அங்கு சென்று மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பல இடங்களில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனை சரிசெய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம்
இதேபோல் சத்தியமங்கலத்தை அடுத்த உக்கரம், மேட்டுக்கடை, காவிலிபாளையம் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 5 மணி அளவில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் உக்கரம் அருகே உள்ள பழமையான வேப்ப மரம் ஒன்று வேரோடு நடுரோட்டில் சாய்ந்தது.
இதில் மரத்தின் கீழே நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று சேதமடைந்தது. இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் நெடுஞ்சாலைதுறையினர் அங்கு சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள். இதனால் அந்த ரோட்டில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடுமுடி
கொடுமுடியில் நேற்று காலையில் வெயில் வாட்டி எடுத்தது. இந்த நிலையில் மதியத்துக்கு மேல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மாலை 6.30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 7.30 மணி வரை சுமார் 1 மணி நேரம் பெய்தது. சாலைப்புதூர், பெரிய வட்டம், சோளக்காளிபாளையம் ஆகிய பகுதிகளிலும் கனமழை கொட்டியது.
பவானிசாகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 3 மணி முதல் சுமார் 45 நிமிடம் வரை மழை பெய்தது. கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 4.30 மணி முதல் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
Related Tags :
Next Story