குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பெண்ணிடம் நகை பறிப்பு


குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பெண்ணிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 2 July 2021 5:18 PM GMT (Updated: 2 July 2021 5:18 PM GMT)

உசிலம்பட்டியில் குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய கும்பல் பெண்ணிடம் இருந்து 10 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி விட்டது.

உசிலம்பட்டி, ஜூலை
உசிலம்பட்டியில் குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய கும்பல் பெண்ணிடம் இருந்து 10 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி விட்டது.
கதவை உடைத்து...
உசிலம்பட்டி நகராட்சி 10-வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். டாஸ்மாக் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் மேல் மாடியில் தூங்கி கொண்டிருந்தார். கீழ்தளத்தில் அவரது மனைவி ரேகா, குழந்தைகளுடன் தூங்கி கொண்டு இருந்தார். 
நள்ளிரவில் வீட்டின் கதவுகளை உடைத்து 3 மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்தனர். சத்தம் கேட்டு ரேகா எழுந்து செல்போனில் தனது கணவரை தொடர்பு கொண்டார். அப்போது அந்த 3 ஆசாமிகளும் குழந்தைகள் மீது கத்தி, கம்பியை வைத்து கொன்று விடுவதாக மிரட்டினர். இதனால் ரேகா பயந்து போனார். உடனே அந்த ஆசாமிகள் அவர் அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்தனர். 
கண்ணாடி உடைப்பு
ரேகா திருடன், திருடன் என சத்தம் போட்டார். சத்தம் கேட்டு மாடியில் இருந்து மகேந்திரன் கீழே ஓடி வந்தார். உடனே அந்த கும்பல் மாடிப்படி கைப்பிடியை உடைத்தனர். கதவு அருகே உள்ள கண்ணாடியையும் உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்து மகேந்திரன் உசிலம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதற்கிடையே மகேந்திரனின் வீட்டுக்கு பின்னால் உள்ள காந்தி என்பவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவை திறந்து பணம், நகை எதுவும் இருக்கிறதா என அந்த கும்பல் தேடி இருக்கிறது. காந்தி எந்த பொருட்களையும் வைக்காததால் எதுவும் திருட்டு போகவில்ைல.
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கொள்ளை நடந்த வீட்டுக்கு நேரில் ஆய்வு செய்தார். அப்போது  உசிலம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் உள்பட போலீசார் உடன் இருந்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சினிமா படப்பாணியில் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்த கும்பல் குழந்தைகளை மிரட்டி நகையை பறித்து சென்று உள்ளது. அந்த கொள்ளை கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story