அடிமட்ட தொண்டனாக இருந்து பணியாற்றியவன்: போலியாக நடித்து ஏமாற்றியவர்களால் அ.தி.மு.க.வை விட்டு வெளியேறினேன்; சிந்து ரவிச்சந்திரன் அறிக்கை
அடிமட்ட தொண்டனாக கட்சியில் பணியாற்றிய என்னை போலியாக நடித்து ஏமாற்றியவர்களால் அ.தி.மு.க.வை விட்டு விலகினேன் என்று சிந்து ரவிச்சந்திரன் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
ஈரோடு
அடிமட்ட தொண்டனாக கட்சியில் பணியாற்றிய என்னை போலியாக நடித்து ஏமாற்றியவர்களால் அ.தி.மு.க.வை விட்டு விலகினேன் என்று சிந்து ரவிச்சந்திரன் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
தி.மு.க.வில் சிந்து ரவிச்சந்திரன்
ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க.வின் மிக முக்கிய பிரமுகர்களில் ஒருவராக இருந்தவர் சிந்து ரவிச்சந்திரன். ஈரோடு புறநகர் (வடக்கு) மாவட்டத்தின் செயலாளராக இருந்தவர். அ.தி.மு.க. தோல்வி அடைந்த நேரங்களில் அப்போதைய பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கே நம்பிக்கை தரும் அளவுக்கு கட்சிப்பணிகள் செய்து அவரது பாராட்டை பெற்றவர். இதன் மூலம் மாநில அளவில் சிட்கோ வாரிய தலைவராக பணியாற்றியவர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது முக்கிய பிரமுகராகவே வலம் வந்தார். இவர் திடீரென்று தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.
அவர் தி.மு.க.வில் இணைந்த நாளில், அதற்கு முன்னதாகவே கட்சி தலைமையால் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார். அதற்கு சசிகலாவுடன் அவர் பேசியது காரணமாக கூறப்பட்டது. ஆனால், தி.மு.க.வில் இணையப்போகும் செய்தி அறிந்தே அ.தி.மு.க.வில் இருந்து என்னை முன்கூட்டியே நீக்கி விட்டதாக அவர் அறிக்கை வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அடிமட்ட தொண்டன்
நான் அ.தி.மு.க.வில் கடந்த 1989-ம் ஆண்டு சேர்ந்தேன். 32 ஆண்டுகள் அ.தி.மு.க. அரசியல் பயணத்தில் இருந்தேன். கோபி நகர 2-வது வார்டு கிளை செயலாளராக பொறுப்பு ஏற்றது முதல், கோபி நகர்மன்ற உறுப்பினராக, கோபி நகர துணை செயலாளராக, கோபி நகர செயலாளராக, மாவட்ட துணை செயலாளராக, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளராக, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக கட்சியில் வளர்ந்தேன்.
கோபி, திருப்பூர், நீலகிரி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளராக, இரண்டு முறை ஈரோடு வடக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளராக, தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழக தலைவராக, கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினராக, அ.தி.மு.க மாநில வர்த்தக அணி செயலாளராக, தலைமை கழக நிர்வாகியாக பல்வேறு சோதனைகளுக்கிடையே அரசியலில் அடிபட்டு, அடிபட்டு மீண்டெழந்து படிப்படியாக பாடுபட்டு வளர்ந்தவன்.
எதிர்க்கட்சி தலைவருடன்...
கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும், தமிழ்நாடு சிமெண்ட் வாரியத் தலைவராகவும் இருந்த காலத்திலேயே, நான் ஈரோடு வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும், தமிழ்நாடு சிறுதொழில் வாரியத் தலைவராகவும் இருந்தவன்.
தமிழகத்தில் எந்த மாவட்ட செயலாளரும் செய்திராத வகையில் மாவட்டத்தில் உள்ள அத்தனை கிளைக்கழகங்களுக்கும் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்து 500 இரும்பு கொடிக்கம்பங்கள் அமைத்தேன். ஒரு கம்பம் ரூபாய் 4 ஆயிரம் என்ற செலவில் எனது சொந்த செலவில் அவற்றை அமைத்து கட்சிப்பணிகளை செய்தவன்.
உண்மை தொண்டர்கள்
பல்வேறு கட்சி பொறுப்புகளுக்கும், உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களிலும், கூட்டுறவு சங்க பொறுப்புகளிலும், அறங்காவலர் குழு நியமனத்திலும் அனைத்து சமுதாயத்தினரும் இடம் பெறும் வகையில் உண்மையான தொண்டர்களை தலைமையிடம் அடையாளம் காட்டினேன்.
2006-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஈரோடு வடக்கு மாவட்டத்தில் மாநிலத்திலேயே அதிக நபர்களை வெற்றி பெறச்செய்து தலைமையிடம் பாராட்டு பெற்றேன். மாவட்டத்தில் ஜெயலலிதா பேரவை, இளைஞர்- இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு போன்றவற்றில் ஆயிரக்கணக்கான இளைஞர்களை புதிதாக கட்சியில் சேர்த்து, பொறுப்புகள் அளித்து கட்சியை வளர்த்தவன்.
கழகமே உயிர் மூச்சு
கழகமே உயிர்மூச்சு என முழுநேர கழக பணியாற்றியவன். மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, ஏழைப் பெண்களுக்கு திருமண உதவி, பேரிடர் காலங்களில் பொது மக்களுக்கு நிவாரண உதவி என மாற்றுக் கட்சியினர் கூட பாராட்டும் வகையில் செயல்பட்டவன். நான் மாவட்ட செயலாளராக இருந்தபோது ஜெயலலிதாவிடம் என்னால் கட்சி பொறுப்புகளுக்கு பரிந்துரைக்கபட்ட தோப்பு வெங்கடாசலம் சட்டமன்ற உறுப்பினராகி பின்னர் அமைச்சர் ஆனார். என்.ஆர்.கோவிந்தராஜர், வி.சத்தியபாமா ஆகியோர் எம்.பி. ஆனார்கள். இ.எம்.ஆர். ராஜா கிருஷ்ணன், எஸ்.ஈஸ்வரன், எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் எம்.எல்.ஏ. ஆனார்கள். இதேபோல் என்னுடன் சம காலத்தில் அரசியலில் பயணம் செய்த நண்பர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அமைச்சர்களாகவும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாகவும் வாய்ப்புகளை பெற்றார்கள். எவ்வளவுதான் கழகத்திற்காக உண்மையாக உழைத்தாலும் என்னைப் போன்ற நபர்களுக்கு நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
சோர்வடையாத பணி
கடந்த 15 வருடங்களாக ஒவ்வொரு முறையும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில்களில் எனக்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், சோர்வடையாமல் அ.திமு.க.வின் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றினேன். இது அ.தி.மு.க.வில் உள்ள அடிமட்ட தொண்டர்கள் வரை அறிவார்கள். எனது இவ்வளவு ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் கட்சித் தலைமையில் எவ்வித புகாருக்கும் ஆளாகாமல் கழக பணியாற்றியவன்.
ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க.வில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட மெஜாரிட்டி சமுதாயத்தினருக்கு வாய்ப்பு வழங்கப்படுவது நியாயமான ஒன்றாக இருக்கிறது. ஆனாலும், அனைத்து தகுதி இருந்தும் சிறுபான்மை சமூகத்தினர் என்ற காரணத்தினால், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத, கட்சிக்காக கடுமையாக உழைத்தவர்களுக்கு மாவட்ட அளவில் வழங்கப்படும் நியமன பதவிகளான மாவட்ட பால்வளத் தலைவர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், மாவட்ட வேளாண்மை விற்பனை குழு தலைவர் போன்ற 10-க்கும் மேற்பட்ட பொறுப்புகளுக்கு கூட வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
நடித்து ஏமாற்றியவர்கள்
ஆனால் தி.மு.க.வில் பார்த்தால் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கூட ஈரோடு மாவட்டத்தில் பெரும்பான்மை சமூகத்தினருக்கு வாய்ப்புகள் வழங்கியதோடு, இங்கு வசிக்கும் சிறுபான்மை சமூகத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல நாடாளுமன்ற, சட்டமன்ற வேட்பாளர்கள் தேர்விலும், அமைச்சரவையிலும் வாய்ப்புகள் வழங்கி உள்ளார்கள்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கும், வெற்றி பெறுவதற்கும் அத்தனை வாய்ப்புகள் இருந்தன. போட்டியிட சீட் கேட்டு வாக்குறுதி பெறப்பட்டும், இறுதியில் கடந்த முறைகளைப் போலவே இந்த தேர்தலிலும் நான் ஏமாற்றப்பட்டு விட்டேன். என் உடன் இருந்து போலியாக நடித்து பழகிக் கொண்டிருந்தவர்களை போன்று என்னால் போலியாக நடித்துக்கொண்டு இருக்க முடியவில்லை.
கட்சிக்காக சிறை சென்றவன்
ஆட்சி அதிகாரத்தை அனுபவித்து விட்டு, எதிர்க்கட்சி ஆனவுடன் அதற்காக தி.மு.க.வில் இணைந்துவிட்டார் என்பதை போன்று என்னுடைய செயல்பாடுகள் கடந்த காலங்களில் இருந்ததில்லை. அ.தி.மு.க. 2 முறை எதிர்க்கட்சியாக இருந்த 10 ஆண்டுகளில் முழுநேர கழகப் பணியில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் செலவு செய்து கட்சியை வளர்த்தவன். கடந்த 1996-2001 எதிர்க் கட்சி ஆட்சி காலத்தில் பல்வேறு போராட்டங்கள், மறியல்கள் செய்து சிறை சென்று பல வழக்குகளை சந்தித்தவன்.
2006-ம் ஆண்டு முதல் 2011 வரை அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது மறியல், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என 10-க்கும் மேற்பட்ட முறை சிறை சென்றவன். அப்போது தமிழகத்தில் நடைபெற்ற 5 சட்டமன்ற இடைத்தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியால் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு என்று பூத்கள் ஒதுக்கப்படும். ஆனால் எனக்கென்று தனியாக பூத்களை கேட்டு வாங்கி சொந்தமாக செலவு செய்து வாக்கு சேகரித்தவன்.
2011-ம் ஆண்டு முதல் 2016 வரை அ.தி.மு.க ஆட்சி காலத்தில் எம்.எல்.ஏ. மற்றும் அப்போதைய அமைச்சருடன் எனக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நான் எந்தவித ஆட்சி அதிகாரங்களிலும் பங்கு கொள்ளவில்லை என்பதை அனைவரும் அறிவர்.
என்ன பாவம் செய்தேன்?
2016 - 2021 ஆண்டு கால ஆட்சியில் கே.ஏ.செங்கோட்டையன் 4 வருடங்கள் அமைச்சராக இருந்தார். அதில் 1½ ஆண்டுகள் கொரோனா நோய் பிரச்சினை. இடையில் வேலூர் நாடாளுமன்ற, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பணி. இடைப்பட்ட சில மாதங்களில் சிலர் சொல்வதை போல ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி நான் என்ன செய்திருக்க முடியும்.
18 வருடங்களுக்கு முன்பு 2 வருடம் மட்டுமே வாரியத் தலைவராக அரசு பதவியில் இருந்தேன். அதற்குப் பின் இன்று வரை எந்த அரசுப் பதவியிலும் இல்லை. 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எனது தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் பக்கத்து தொகுதியான பவானிசாகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தேன். 32 ஆண்டுகள் முழுநேர கழகப் பணியாற்றி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி தலைவர்கள் போன்ற அரசு மற்றும் கட்சிப் பொறுப்புகளுக்கு நூற்றுக்கணக்கான கழகத்தினரை உருவாக்கியதோடு, மாவட்டத்தில் உள்ள அடிமட்ட தொண்டர்களைக் கூட பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு செயல்பட்டதை தவிர நான் வேறு என்ன பாவம் செய்தேன்?
தி.மு.க.வில் அங்கீகாரம்
தி.மு.க.வில் என்னுடைய களப்பணிக்கு நிச்சயம் எதிர்காலத்தில் அங்கீகாரம் கிடைக்கும், அதற்கான இலக்கை என்னுடைய செயல்பாடுகளினால் அடைய முடியும் என்ற ஒரே நம்பிக்கையில், தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல தொலைநோக்குப் பார்வையோடு பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி நல்லாட்சி நடத்தி வரும் தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நான் தி.மு.க.வில் இணைந்தேன்.
என்னுடன் தி.மு.க.வில் இணைந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ., ஒன்றிய, நகர செயலாளர்கள், விற்பனைக்குழு தலைவர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் பெரும்பாலானோர் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்களே ஆவர்.
நன்றி
இதுவரை என்னை உங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக நினைத்து என்னுடன் அ.திமு.க.வில் பயணித்த அனைத்து பொறுப்பாளர்களுக்கும், தொண்டர்களுக்கும், நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கின்றேன்.
இனிவரும் காலங்களில் ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என். நல்லசிவம், ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சு.முத்துசாமி ஆகியோர் தலைமையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரத்தை மென்மேலும் வலுப்படுத்த பணியாற்றுவேன்.
இவ்வாறு சிந்து ரவிச்சந்திரன் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.
தேர்தலுக்கு பின் ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் திடீர் என்று ஈரோடு புறநகர் மாவட்ட அ.தி.மு.க.வின் சக்தி வாய்ந்த பிரமுகராக இருந்த சிந்து ரவிச்சந்திரன் தி.மு.க.வில் ஐக்கியமாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். புறநகர் மாவட்டத்தில் 2 முக்கிய அமைச்சர்கள் கடந்த ஆட்சி காலத்தில் இருந்தும் ஏற்கனவே கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்த தோப்பு வெங்கடாசலம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவரைத்தொடர்ந்து சிந்து ரவிச்சந்திரன், அவர் சார்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் தி.மு.க.வுக்கு சென்று விட்டதால் ஈரோடு புறநகர் மாவட்டம் பலம் இழந்து வருகிறதா? என்ற சந்தேகம் அ.தி.மு.க.வினருக்கு ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story