ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்; அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடந்தது
ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடந்தது.
ஈரோடு
ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடந்தது.
ஆலோசனை கூட்டம்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும், புதிய திட்டப்பணிகளை மேற்கொள்ளவும், வளர்ச்சி திட்ட பணிகள் செய்யவும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலக வளர்ச்சிமன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
அமைச்சர் ஆய்வு
கூட்டத்தில் வேளாண் துறை மூலம் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு நடத்தினார். அப்போது ஈரோடு, ஊத்துக்குளி, நல்லாம்பட்டி, தாளவாடி பகுதிகளில் புதிய குளிர்பதனக்கிடங்குகள் அமைத்தல், மஞ்சள் ஏற்றுமதி மைய தரம் உயர்த்துதல் ஆகிய திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறப்பட்டது. ஈரோட்டில் உணவு பூங்கா அமைப்பது தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்பட்டது. இந்த திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் திட்டம் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் விரிவாக விவாதித்தார்.
மேலும், அரசு வேளாண் கருவிகள் உற்பத்தி தொழிற்பேட்டை, நவீன மஞ்சள் ஆராய்ச்சி மையம் உருவாக்குவதுடன், அனைத்து வட்டார வேளாண்மை அலுவலகங்களிலும் மண் பரிசோதனை ஆய்வுக்கூடங்கள் நிறுவுதல், தாலுகா அளவில் வேளாண் நோய் தடுப்பு நிலையம் அமைப்பது குறித்தும், அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நறுமண தொழிற்சாலை
தோட்டக்கலைத்துறை சார்பில் தாளவாடியில் மூலிகைப்பண்ணை அமைத்தல், சத்தியமங்கலத்தில் நறுமண தொழிற்சாலை அமைத்தல் ஆகியவை பற்றி அமைச்சர் திட்ட விளக்கம் கேட்டு அறிந்தார்.
இதுபோல் கால்நடைத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, நெடுஞ்சாலைத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், தொழில்துறை, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, பொதுப்பணித்துறை, வேலைவாய்ப்பு பயிற்சித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, காவல்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறைகள் சார்பிலும் செய்யப்பட உள்ள பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிரதிக்தயாள், மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், பயிற்சி கலெக்டர் ஏகம் ஜெ.சிங், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன், செயற்பொறியாளர் விஜயகுமார் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story