காஞ்சீபுரம் சரகத்தில் 12 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை - டி.ஐ.ஜி. தகவல்


காஞ்சீபுரம் சரகத்தில் 12 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை - டி.ஐ.ஜி. தகவல்
x
தினத்தந்தி 3 July 2021 4:57 AM GMT (Updated: 3 July 2021 4:57 AM GMT)

காஞ்சீபுரம் சரகத்தில் முக்கியமான இடங்களில் மொத்தம் 12 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திட நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக டி.ஐ.ஜி. சத்தியபிரியா தெரிவித்தார். காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சத்தியபிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் 2,038, திருவள்ளூரில் 4,800, செங்கல்பட்டில் 5,162 உள்பட மொத்தம் 12 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் காஞ்சீபுரம் சரகத்தில் உள்ள குற்றம் அதிகமாக நடக்கும் இடங்கள், சோதனைச்சாவடிகள் போன்ற இடங்களில் நிறுவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த பணிகளை வரும் ஆகஸ்டு மாதம் 15-ந் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறோம். குற்றம் அதிகமாக நடக்கும் இடங்களை கண்டறிந்து புதிதாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது மற்றும் ஏற்கனவே இருந்து வருகிற கண்காணிப்பு கேமராக்களை பழுது பார்த்து புதுப்பித்து நவீனமயமாக்குவது என இரு வகைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகளை செய்து வருகிறோம். இதன் மூலம் குற்றங்கள் பெருமளவு குறைவதுடன் குற்றங்கள் நடந்தாலும் அதற்கான காரணங்களை கண்டு பிடிக்க உதவியாகவும் இருக்கும்.

காஞ்சீபுரம் சரகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 25 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வரும் நிலையில் ஆசிரியர்களோடு இணைந்து அதே ஆன்லைன் வகுப்புகள் வழியாக விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும். இந்த விழிப்புணர்வு முகாமில் போக்சோ சட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கம் அளிக்கப்படும். சமூக வலைதளங்கள் மூலம் எவ்வாறெல்லாம் மாணவர்கள் தவறான பாதைக்கு செல்கிறார்கள் என்பது குறித்து அனுபவ கதைகள் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 19 வயது முதல் 23 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களே பெரும்பாலும் ரவுடிகளாக மாறி கொண்டிருக்கிறார்கள். காஞ்சீபுரம் சரகத்தில் ரவுடியிசம் முழுமையாக ஒழிக்க அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story