உத்திரமேரூர் அருகே ரவுடி வெட்டிக்கொலை - 3 பேர் கைது


உத்திரமேரூர் அருகே ரவுடி வெட்டிக்கொலை - 3 பேர் கைது
x
தினத்தந்தி 3 July 2021 11:07 AM IST (Updated: 3 July 2021 11:07 AM IST)
t-max-icont-min-icon

உத்திரமேரூர் அருகே ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கத்தை அடுத்த காவி தண்டலம் கிராமம் எட்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குட்டி. இவரது மகன் தமிழ்வேந்தன் (வயது 26). ரவுடியான இவர் மீது சாலவாக்கம் மற்றும் உத்திரமேரூர் போலீஸ் நிலையங்களில் கொலை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் நேற்று இரவு கிராமத்தின் அருகே வயல்வெளியில் தமிழ் வேந்தனை யாரோ மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி முகத்தை சிதைத்து மிக கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்து சாலவாக்கம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் தெரிந்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலையால் அந்த கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. சம்பவ இடத்திற்கு காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் நேரில் வந்து பார்வையிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தார்.

மேலும் அந்த இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது மோப்ப நாய் கொலை நடந்த இடத்திலேயே சுற்றி சுற்றி வந்து நின்றது. இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே ஊரை சேர்ந்த வசி என்கிற வசீகரன் (28), நிஷாந்த் (26), சரண்ராஜ் (24) ஆகியோரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், தனக்கும் தமிழ்வேந்தனுக்கும் யார் பெரியவர் என்ற போட்டி இருந்தது. இதில் தமிழ்வேந்தன் தன்னை தீர்த்து கட்டுவதாக கூறிக்கொண்டு இருந்தார். இதனால் நான் என்னுடைய நண்பர்கள் நிஷாந்த், சரண்ராஜ் ஆகியோருடன் தமிழ்வேந்தனிடம் சமரசமாக பேசி மது குடிக்கலாம் என்று வயல்வெளிக்கு அழைத்து சென்றேன். அங்கு கத்தியால் தமிழ்வேந்தனை வெட்டி கொலை செய்தேன்.

இவ்வாறு வசீகரன் வாக்குமூலத்தில் குறிப்பிட்டதாக போலீசார் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து வசீகரன், நிஷாந்த், சரண்ராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

Next Story