ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை திறப்பு; ஏற்பாடுகள் தீவிரம்


ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை திறப்பு; ஏற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 4 July 2021 3:53 AM IST (Updated: 4 July 2021 3:53 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன.
மதுக்கடைகள்
தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது. எனவே இதுவரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத பகுதிகளிலும் நாளை (திங்கட்கிழமை) மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் 213 டாஸ்மாக் கடைகள் நாளை (திங்கட்கிழமை) முதல் திறக்கப்படும். காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை இந்த கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
ஏற்பாடு
மதுவாங்க வரும் குடிமகன்கள் இடைவெளியை கடைபிடிக்கும் வகையிலும் நெரிசல் இன்றி மது வாங்கி செல்லவும் வசதியாக தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் நேற்று நடந்தன. ஈரோடு வி.சி.டி.வி. வீதியில் உள்ள டாஸ்மாக் கடையில் சவுக்கு கம்புகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டதுடன், இடைவெளியுடன் நிற்க வெள்ளை வட்டங்களும் போடப்பட்டன.
இதுபோல அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மதுக்கடைகள் திறந்தாலும் பார்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மது வாங்க வருபவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கவலை
கடந்த 2 மாதங்கள் மதுக்கடைகள் இல்லாததால் பெரும்பாலான குடிமகன்கள் தங்கள் குடும்பங்களை நல்ல முறையில் பார்த்துக்கொண்டனர். வேலை இல்லை, வருவாய் இல்லை என்ற நிலையிலும் கணவன், மகன், தந்தை என ஆண்கள் மதுபோதையை மறந்து வீட்டில் இருந்ததால் பெண்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.
ஆனால் நாளை முதல் மீண்டும் குடிமகன்கள் மதுக்கடைகளை நாடி செல்லும் நிலையும், குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழலும் ஏற்படும். இது பல குடும்பங்களில் கவலையை ஏற்படுத்தும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

Next Story