நாளை முதல் இயங்க உள்ளதால் அரசுபோக்குவரத்துக்கழக பஸ்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்


நாளை முதல் இயங்க உள்ளதால் அரசுபோக்குவரத்துக்கழக பஸ்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 3 July 2021 10:23 PM GMT (Updated: 3 July 2021 10:23 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் இயங்க உள்ளதால் பஸ்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்தது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் இயங்க உள்ளதால் பஸ்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்தது.
அரசு பஸ்கள் ஓடும்
தமிழ்நாட்டில் உள்ள 27 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகளால் கடந்த வாரம் முதல் அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு  உள்பட 11 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு கொடுக்கப்பட்டு இருப்பதால் நாளை (திங்கட்கிழமை) முதல் அரசுபோக்குவரத்துக்கழக பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதை முன்னிட்டு நேற்று அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் நிறுத்தப்பட்டு உள்ள பஸ்களை தூய்மை செய்யும் பணிகள் தொடங்கின. ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் தூய்மை பணியாளர்கள் பஸ்களை சுத்தம் செய்தனர். அதைத்தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஈரோடு மண்டல துணைப்பொது மேலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் பணியாளர்கள் இந்த வேலைகளில் ஈடுபட்டனர்.
400 பஸ்கள்
இதுபற்றி துணைப்பொது மேலாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:-
ஈரோடு மண்டலத்தில் 13 பணிமனைகளில் இருந்து 728 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து 60 சதவீதம் பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதாவது சுமார் 400 பஸ்கள் வரை ஈரோடு மாவட்டத்தில் இருந்து இயங்கும். அரசு வழிகாட்டுதலின்படி பிற மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படும். ஆனால் பிற மாநிலங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட மாட்டாது.
பஸ் பயணிகள் அரசின் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பஸ்சில் 50 சதவீதம் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது. பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சானிடைசர் பயன்படுத்த வேண்டும். அத்தியாவசிய தேவை இன்றி யாரும் பஸ்களில் பயணிக்க வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மகிழ்ச்சி
அரசு போக்குவரத்துக்கழக நகர பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு இலவச பயணத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள்தான் பஸ்கள் இயங்கின.
மீண்டும் நாளை (திங்கட்கிழமை) முதல் பஸ்கள் ஓடத்தொடங்குவதால் இலவச பயணச்சீட்டு அனுமதிக்கப்பட்ட பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்யும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக குறைந்த ஊதியத்தில் பல்வேறு வேலைகளுக்கும் சென்று வரும் பெண்கள் உற்சாகமாக நாளை மீண்டும் பயணத்தை தொடங்குவார்கள்.

Next Story