ஈரோடு அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து- லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்


ஈரோடு அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து- லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 3 July 2021 10:23 PM GMT (Updated: 3 July 2021 10:23 PM GMT)

ஈரோடு அருகே பஞ்சு மில்லில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

பவானி
ஈரோடு அருகே பஞ்சு மில்லில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
தீ விபத்து
ஈரோடு அருகே உள்ள சித்தோடு குமிளாம்பரப்பு பகுதியை சேர்ந்தவர் திலீப்குமார் (வயது 39). இவர் சித்தோடு ஆட்டையாம்பாளையம் பகுதியில் பஞ்சு மில் வைத்து நடத்தி வருகிறார். இந்த மில்லில் சுமார் 15 பேர் வேலை செய்து வருகின்றனர். இந்த மில்லுக்கு தேவையான பனியன் துணிகள் திருப்பூரில் இருந்து மொத்தமாக கொண்டு வரப்படுகிறது. பின்னர் இங்கு பனியன் துணிகளை அரைத்து பஞ்சாக்கி கோவை, பல்லடம், வெள்ளகோவில், திருப்பூர், ஈரோடு உள்பட பல்வேறு நூல் மில்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பஞ்சு மில்லின் ஒரு பகுதியில் வைக்கப்பட்டு இருந்த பனியன் துணிகளில் தீப்பற்றி எரிந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர். மேலும், மில்லில் இருந்து ஊழியர்கள் உடனடியாக வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர். அதற்குள் தீ மளமளவென பரவியது. இதனால் கிடங்கு முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது.
எரிந்து நாசம்
இந்த தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு, பவானி, பெருந்துறை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 வாகனங்களில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்தனர். அங்கு சென்றதும் உடனே தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பனியன் துணிகளில் தீ எரிந்து கொண்டே இருந்ததால், அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. 
சுமார் 6 மணி நேரமாக போராடி அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்கிடையே நேற்று காலையில் மீண்டும் தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது. இதையடுத்து பவானி தீயணைப்பு நிலையத்தில் இருந்து மேலும் ஒரு வாகனம் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. 
தீ விபத்து ஏற்பட்ட இடத்தை ஈரோடு மாவட்ட தீயணைப்பு அதிகரி புளுகாண்டி நேரில் சென்று பார்வையிட்டார். 
தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பனியன் துணிகள் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story