தஞ்சையில் தெய்வத்தமிழ் பேரவையினர், இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சையில், தெய்வத்தமிழ் பேரவை மற்றும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தஞ்சாவூர்,
தஞ்சையில், தெய்வத்தமிழ் பேரவை சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை தாங்கினார். தமிழக புரட்சி மக்கள் கழகத்தை சேர்ந்த அரங்க.குணசேகரன், பேரழிப்பிற்கு எதிரான பேரியக்க தலைவர் லெனின், வள்ளலார் மன்றத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வி, ராஜமாணிக்கம், தமிழ்தேசிய பேரியக்க மாவட்ட செயலாளர் வைகறை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யக்கோரியும், அர்ச்சகர் பயிற்சி பெற அனைத்து சாதியினருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களுக்கு கோவில்களில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.
இந்து மக்கள் கட்சி சார்பில் தஞ்சை ரெயிலடியில் நேற்று "என் கோவில், என் உரிமை" என்ற தலைப்பின் கீழ் இளைஞரணி மாநில செயலாளர் கார்த்திக்ராவ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தி, மாநில தகவல் தொழில்நுட்பத் தலைவர் ஹரிகரன், செயலாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், கோவில் நிர்வாகத்தில் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும். கோவில் பராமரிப்பை பக்தர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பூதலூர் ஒன்றியம் சானூரப்பட்டியில் தெய்வத்தமிழ் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்வழி கருவறை பூஜைக்கு சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ் தேசிய பேரியக்க பூதலூர் ஒன்றிய செயலாளர் தென்னவன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் வள்ளலார் வழிபாடு அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன், தமிழ் தேசிய பேரியக்க பூதலூர் ஒன்றிய நிர்வாகிகள் கருணாநிதி, காமராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story