பிரசவத்தின் போது இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு 8 வாரத்தில் வழங்க ஐகோர்ட்டு உத்தரவு
பிரசவத்தின் போது இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டை 8 வாரத்தில் வழங்க, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்காமங்கலத்தை சேர்ந்த ராஜகோபால், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
என் மனைவியை பிரசவத்திற்காக கடந்த 2012-ம் ஆண்டில் ராஜக்காமங்கலம் ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தேன்.
மறுநாள் காலையில் பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பின்பு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக என் மனைவியை ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு டாக்டர்கள் கூறினர். அங்கு ஆம்புலன்ஸ் இல்லை. அரை மணி நேரம் தாமதத்துக்கு பிறகே ஆம்புலன்ஸ் கிடைத்தது.
ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சேர்த்த சிறிது நேரத்தில் என் மனைவி இறந்துவிட்டார். பிரசவத்துக்கு பிந்தைய ரத்தக்கசிவு மற்றும் உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் என் மனைவி இறந்துள்ளார். எனவே என் மனைவி இறப்புக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்திருந்து மனுதாரரின் மனைவியை மருத்துவமனையில் சேர்த்து இருந்தால் உயிர் பிழைத்திருக்கலாம். ஆம்புலன்ஸ் வருகைக்காகக் காத்திருந்தபோது அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டு மனுதாரரின் மனைவி இறந்துள்ளார்.
இதுபோன்ற சூழலில் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
எனவே மனுதாரருக்கு சுகாதாரத்துறை 8 வாரத்தில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story