ஈரோடு மாவட்டத்தில் வழிபாட்டு தலங்கள் இன்று திறப்பு- சுத்தம் செய்து கிருமிநாசினி தெளிக்கப்பட்டது


ஈரோடு மாவட்டத்தில் வழிபாட்டு தலங்கள் இன்று திறப்பு- சுத்தம் செய்து கிருமிநாசினி தெளிக்கப்பட்டது
x
தினத்தந்தி 5 July 2021 2:46 AM IST (Updated: 5 July 2021 2:46 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வழிபாட்டு தலங்கள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுவதையொட்டி சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வழிபாட்டு தலங்கள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுவதையொட்டி சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
கோவில்கள் திறப்பு
கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது. இன்று (திங்கட்கிழமை) முதல் கோவில்கள் திறக்கப்பட உள்ளதால், அதற்கான முன்ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டன.
ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் கோவிலில் தூய்மை செய்யும் பணி நேற்று நடந்தது. அங்கு சிவனடியார் உழவாரப்பணி குழுவினர் கோவிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்கள். அப்போது கோவில் வளாகத்தில் தண்ணீர் விட்டு தூய்மை செய்தல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 
தேவாலயம்
பவானி செல்லியாண்டி அம்மன் கோவில், மேற்கு தெரு மாரியம்மன் கோவில், எல்லையம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சுத்தம் செய்யும் பணி நடந்தது.
மேலும், பவானி மேட்டூர்ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயம், புனித அமல அன்னை ஆலயம், ஊராட்சி கோட்டையில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயம், ஜம்பை சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயம் உள்ளிட்ட பகுதிகளிலும் தூய்மை பணிகள் நடந்தன.
முக கவசம்
கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், அமரபணீஸ்வரர் கோவில், ஆதிநாராயண பெருமாள் கோவில், பவளமலை முருகன் கோவில், பச்சைமலை முருகன் கோவில், சாரதா மாரியம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் நேற்று சுத்தம் செய்யும் பணி நடந்தது. இதில் கோவில் பணியாளர்கள் தண்ணீரை ஊற்றி கோவில் வளாகத்தை சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளித்தனர். மேலும், பக்தர்கள் சமூக இடைவெளிவிட்டு வரும் வகையில் அடையாளங்கள் குறிப்பிடப்பட்டது. பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று கோவில்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.
சென்னிமலை
சென்னிமலை முருகன் கோவிலில் கோவில் வளாகம், கோவிலின் உள்பகுதி மற்றும் இளைப்பாறும் மண்டபம் ஆகிய இடங்களில் கோவில் பணியாளர்கள் தண்ணீரை ஊற்றி சுத்தப்படுத்தினார்கள். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் வட்டங்கள் போடப்பட்டன. மேலும் பக்தர்கள் வெயிலில் சிரமப்படாமல் இருக்கும் வகையில் கோவிலுக்கு வெளியே நிழல் கூண்டுகளும் வைக்கப்பட்டு உள்ளன. சமீபத்தில் பெய்த மழையால் மலைக்கோவிலுக்கு செல்லும் தார் சாலையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. இந்த மலைப்பாதையும் சரி செய்யப்பட்டு உள்ளது.

Next Story