ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் 400 பஸ்கள் இயக்க முடிவு
ஈரோடு மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 400 பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 400 பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தூய்மை செய்யும் பணி
தமிழ்நாட்டில் உள்ள 27 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகளால் கடந்த வாரம் முதல் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு, திருப்பூர், கோவை உள்பட 11 மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதையொட்டி நேற்று முன்தினம் அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் நிறுத்தப்பட்டு உள்ள பஸ்களை தூய்மை செய்யும் பணிகள் தொடங்கின. ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில், தூய்மை பணியாளர்கள் பஸ்களை தூய்மை செய்தனர். அதைத்தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
கோபி
மேலும் ஈரோடு பஸ் நிலையத்துக்குள் வாகனங்கள் செல்ல முடியாதபடி 3 நுழைவு வாயில்களில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு இருந்தன. பஸ் நிலைய வளாக பகுதியில், நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்ததால் பிரதான நுழைவு வாயில் மட்டும் திறக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் ஓட உள்ளதால், ஈரோடு பஸ் நிலையத்தில் அனைத்து நுழைவு வாயில் பகுதியிலும் வைக்கப்பட்டு இருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு நேற்று தூய்மை பணி தீவிரமாக நடந்தது.
இதேபோல் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அரசு பஸ்களை சுத்தம் செய்யும் பணியும் நேற்று நடந்தது. அதன்படி அந்த கிளையில் உள்ள 92 பஸ்களும் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டன.
400 பஸ்கள் இயக்கம்
இதுகுறித்து ஈரோடு மண்டல துணை பொது மேலாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:-
ஈரோடு மண்டலத்தில் 13 பணிமனைகளில் இருந்து 728 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து 60 சதவீதம் பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி சுமார் 400 பஸ்கள் வரை ஈரோடு மாவட்டத்தில் இருந்து இயங்கும். அரசு வழிகாட்டுதலின்படி பிற மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படும். ஆனால் பிற மாநிலங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட மாட்டாது.
பயணிகள் அரசின் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பஸ்சில் 50 சதவீதம் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது. பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சானிடைசர் பயன்படுத்த வேண்டும். அத்தியாவசிய தேவை இன்றி யாரும் பஸ்களில் பயணிக்க வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இலவச பயணம்
அரசு போக்குவரத்து கழக நகர பஸ்களில் பயணம் செய்யும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு இலவச பயணத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள்தான் பஸ்கள் இயங்கின.
மீண்டும் இன்று (திங்கட்கிழமை) முதல் பஸ்கள் ஓடத்தொடங்குவதால் இலவச பயணச்சீட்டு அனுமதிக்கப்பட்ட பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்ய உள்ளனர்.
Related Tags :
Next Story