சென்னிமலை பகுதியில் பலத்த மழை; 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது- வெள்ளத்தில் சிக்கிய 150 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்


சென்னிமலை பகுதியில் பலத்த மழை; 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது- வெள்ளத்தில் சிக்கிய 150 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
x
தினத்தந்தி 6 July 2021 1:33 AM IST (Updated: 6 July 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் 50 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. வெள்ளத்தில் சிக்கிய 150 பேைர தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர்.

சென்னிமலை
சென்னிமலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் 50 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. வெள்ளத்தில் சிக்கிய 150 பேைர தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர்.
பலத்த மழை
சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்தது. அதேபோல் நேற்று முன்தினம் பகலில் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்தது. இந்த நிலையில் மதியத்துக்கு மேல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. அதன்பின்னர் மாலை 5 மணி அளவில் சிறிது நேரம் மழை பெய்தது.
அதைத்தொடர்ந்து இரவு 10 மணி அளவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. சில நிமிடங்களில் பலத்த மழையாக மாறியது.  நள்ளிரவு 12 மணி வரை பலத்த மழையாக பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வெள்ளம் சூழ்ந்தது
இதில் முகாசிபிடாரியூர் அருகே பொறையன்காடு குமரன் நகர் பகுதியில் உள்ள 50 வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. மேலும் வீட்டுக்கு வெளியிலும் ஆறு போல் மழை வெள்ளம் சூழ்ந்து நின்றது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர். வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் இதுபற்றி முகாசிபிடாரியூர் ஊராட்சி தலைவர் கேபிள் சி.நாகராஜுக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து அவர் அங்கு விரைந்து சென்று மழை வெள்ளம் சூழ்ந்த வீடுகளை பார்வையிட்டார். 
பின்னர்   இதுபற்றி   சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
150 பேர் மீட்பு
அதன் பேரில் நிலைய அதிகாரி துரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தியாகி குமரன் நகர் பகுதிக்கு விரைந்து சென்றனர். பின்னர் மழை வெள்ளத்தில் சிக்கிய 50 குடும்பங்களை சேர்ந்த சுமார் 150 பேரை கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்டனர். அதைத்தொடர்ந்து அனைவரையும் அங்குள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதுகுறித்து சென்னிமலை தீயணைப்பு நிலைய அதிகாரி துரை கூறும்போது, ‘தியாகி குமரன் பகுதியில் மழை நீர்  செல்லும் வகையில் நீர்வழி பாதை உள்ளது. இந்த பாதை அருகிலேயே சுடுகாடு ஒன்றும் உள்ளது. இந்த சுடுகாட்டில் பிணம் எரிக்க வருபவர்கள் மெத்தைகள், தலையணைகள், பிளாஸ்டிக் பொருட்களை போட்டு விட்டு சென்று விடுகின்றனர். 
இவைகள் அனைத்தும் நீர்வழி பாதையில் கிடப்பதால் மழை காலங்களில் தங்கு தடையின்றி மழைநீர் செல்ல முடியாமல் தேங்கி குடியிருப்பு பகுதிக்குள் சென்று விடுகிறது.  அதனால் இனிமேலாவது இதுபோன்ற தவறுகளை பொதுமக்கள் செய்யாமல் இருக்க வேண்டும்’ என்றார்.
குளம், குட்டைகள் நிரம்பின
அதேபோல் மேலப்பாளையத்தில் உள்ள ஓட்டப்பாறை ஊராட்சி அலுவலகம் அருகில் உள்ள வறண்டு கிடந்த குட்டை நிரம்பி, தண்ணீர் வெளியேறி அங்குள்ள ரேஷன் கடைக்குள் புகுந்து விட்டது. இதனால் கடையில் இருந்த அரிசி, சர்க்கரை போன்ற அனைத்து பொருட்களும் மழை நீரில் நனைந்து சேதமானது. இதுபற்றி அறிந்ததும் ஊராட்சி பணியாளர்கள் அங்கு சென்று மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றினர். 
சென்னிமலை பகுதியில் இருந்து வெளியேறும் மழை நீர் பெருமளவில் ஓட்டக்குளம் வழியாக பசுவபட்டி ஊராட்சி பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளில் சென்று கலந்தது. இதனால் அந்த குளம், குட்டைகள் அனைத்தும் நிரம்பின. மேலும் சென்னிமலை கொமரப்பா செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. 
சாயக்கழிவுநீர்
அதிக அளவில் மழை நீர் சென்றதால் பசுவபட்டி என்ற இடத்திலும், பூச்சக்காட்டுவலசு என்ற இடத்திலும் ரோட்டின் மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த வழியே போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. விவசாயிகள் தங்களது தோட்டங்களுக்கு அந்த வழியே செல்ல முடியாமல் தவித்தனர்.
சென்னிமலை பகுதியில் உள்ள ஒரு சில சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மழைநீரில் கலந்து சென்றதால் நுங்கும், நுரையுமாக காணப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

Related Tags :
Next Story