ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது இறந்த குழந்தை உடலுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த உறவினர்கள்


ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது இறந்த குழந்தை உடலுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த உறவினர்கள்
x
தினத்தந்தி 6 July 2021 1:44 AM IST (Updated: 6 July 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது இறந்த குழந்தை உடலுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது இறந்த குழந்தை உடலுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்த உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது. 
கர்ப்பம்
ஈரோடு சம்பத் நகர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (வயது 27). இவர் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணி புரிந்து வருகிறார். இவருடைய மனைவி ரமணி (23). கர்ப்பமடைந்த இவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாதந்தோறும் பரிசோதனை செய்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரமணி மகப்பேறுக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 3-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். ரமணியை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை நன்றாக இருப்பதாகவும், சுகப்பிரசவமாக குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் கூறியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை ரமணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து டாக்டர்கள் ஆபரேசன் மூலம் தான் குழந்தையை எடுக்க முடியும் என்றும், குழந்தை நிலை மோசமாக இருப்பதாகவும் கூறியதாக தெரிகிறது. பின்னர் சிறிது நேரத்தில் ரமணிக்கு பெண் குழந்தை பிறந்து இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் உடலுடன்...
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கணேஷ் மற்றும் உறவினர்கள் குழந்தை பிறந்து இறந்ததற்கான காரணம் என்ன? குழந்தைக்கு என்னென்ன மருத்துவம் பார்த்தீர்கள்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால் பணியில் இருந்த டாக்டர்கள் எந்த ஒரு பதிலும் கூறாமல், ஒரு துண்டு சீட்டில் மட்டும் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கணேஷ் மற்றும் உறவினர்கள் இறந்த பெண் குழந்தையின் உடலுடன் நியாயம் கேட்டு ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சூரம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ஒரு ஆட்டோ மூலம் மீண்டும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
கடும் நடவடிக்கை
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த ஈரோடு ஆர்.டி.ஓ. பிரேமலதா, தாசில்தார் பாலசுப்பிரமணியம், டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜு ஆகியோர், உறவினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் பிரசவத்தின் போது தவறு நடந்திருந்தால் சம்மந்தப்பட்ட டாக்டர்கள், செவிலியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் சமாதானம் அடைந்தனர். மேலும் இறந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Next Story