ஈரோடு மாவட்டத்தில் 213 டாஸ்மாக் கடைகள் திறப்பு- மது பிரியர்கள் மகிழ்ச்சி


ஈரோடு மாவட்டத்தில் 213 டாஸ்மாக் கடைகள் திறப்பு- மது பிரியர்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 6 July 2021 2:09 AM IST (Updated: 6 July 2021 2:09 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் 213 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 213 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மூடல்
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டன. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 213 டாஸ்மாக் கடைகளும், 128 பார்களும் செயல்பட்டு வந்தன. சாதாரண நாட்களில் ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை வியாபாரம் நடைபெறும். பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் ரூ.7 கோடி முதல் ரூ.10 கோடி வரை வியாபாரம் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியதால் முதலில் பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் மீண்டும் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளுடன் டாஸ்மாக் கடைகள் செயல்பட தொடங்கியது. ஆனால் ஈரோடு, திருப்பூர், கோவை உட்பட 11 மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக இருப்பதன் காரணமாக டாஸ்மாக் கடைகள் செயல்படாமல் இருந்து வந்தது. இதனால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மது பிரியர்கள் அடுத்த மாவட்டத்திற்கு சென்று மது வாங்கி வந்தனர்.
டாஸ்மாக் கடைகள் திறப்பு
தற்போது ஈரோடு உள்பட 11 மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு குறைய தொடங்கியதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஈரோடு உள்பட 11 மாவட்டங்களில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு பின்னர் நேற்று காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
ஆனால் காலை 6 மணி முதலே டாஸ்மாக் கடையில் மது பிரியர்கள் வரிசையில் நின்று மது வாங்க காத்து நின்றனர். மாவட்டம் முழுவதும் 213 டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. மது பிரியர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக டாஸ்மாக் கடைகள் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டங்கள் போடப்பட்டு இருந்தன.
சூடம் ஏற்றி...
மது வாங்க வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டிருந்தது. மது பிரியர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து தங்களுக்கு வேண்டிய மது பானங்களை வாங்கிச் சென்றனர். ஈரோடு ரெயில் நிலையம், திருநகர் காலனி ஆகிய பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் மதுப்பிரியர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதற்கிடையில் திருநகர் காலனி டாஸ்மாக் கடையில் மது வாங்கிய ஒருவர் மது பாட்டிலை கடை முன்பு வைத்து சூடம் ஏற்றி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதேநேரம் பார்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்திலுள்ள 128 பார்களும் வழக்கம்போல் மூடப்பட்டு இருந்தது. ஏறக்குறைய 2 மாதங்களுக்கு பின்னர் மதுக்கடைகள் செயல்பட தொடங்கி உள்ளதால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story