பவானிசாகர் அருகே தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்- 500 வாழைகள் நாசம்
பவானிசாகர் அருகே தோட்டத்தில் புகுந்த யானைகள், 500 வாழைகளை நாசப்படுத்தின.
பவானிசாகர்
பவானிசாகர் அருகே தோட்டத்தில் புகுந்த யானைகள், 500 வாழைகளை நாசப்படுத்தின.
யானைகள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்டது பவானிசாகர் வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிகமாக வசித்து வருகின்றன. இந்த யானைகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து அருகே உள்ள விவசாய தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது வாடிக்கையாகி வருகிறது.
பவானிசாகர் போலீஸ் குடியிருப்பு அருகே உள்ள அம்மாபாளையத்தை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 45). விவசாயி. இவரது வீட்டையொட்டி தோட்டம் உள்ளது. இங்கு அவர் 1,800 வாழைகள் பயிரிட்டுள்ளார்.
வாழைகள் நாசம்
இந்த நிலையில் சரவணகுமார் நேற்று காலை 6 மணி அளவில் தோட்டத்துக்கு சென்று பார்த்தார். அப்போது வாழைகள் நாசப்படுத்தப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நேற்று முன்தினம் இ்ரவு வனப்பகுதியில் இருந்து யானைகள் வந்துள்ளன. பின்னர் சரவணக்குமாரின் தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை தின்றும், மிதித்தும் நாசப்படுத்திவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது தெரியவந்தது.
முற்றுகையிட முடிவு
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, ‘பவானிசாகர் பகுதியில் புங்கார், காராச்சிகொரை, கோடேபாளையம், அம்மாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களுக்குள் யானைகள் அடிக்கடி புகுந்து விவசாய பயிர்களை நாசமாக்கும் சம்பவம் தொடர்ந்து நிகழ்கிறது.
இதை கட்டுப்படுத்த கோரி பவானிசாகர் வனத்துறை அதிகாரிகளிடம் பல முறை புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே விவசாயிகள் ஒன்று சேர்ந்து சத்தியமங்கலத்தில் உள்ள மாவட்ட வன அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட முடிவுசெய்துள்ளோம்’ என்றனர்.
Related Tags :
Next Story