ஈரோட்டில் ஆன்லைன் சூதாட்டம் நடத்திய 2 பேர் கைது- மடிக்கணினி, செல்போன் பறிமுதல்


ஈரோட்டில் ஆன்லைன் சூதாட்டம் நடத்திய 2 பேர் கைது- மடிக்கணினி, செல்போன் பறிமுதல்
x
தினத்தந்தி 6 July 2021 2:10 AM IST (Updated: 6 July 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் ஆன்லைன் சூதாட்டம் நடத்திய 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மடிக்கணினியும், செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஈரோடு
ஈரோட்டில் ஆன்லைன் சூதாட்டம் நடத்திய 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மடிக்கணினியும், செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டம் மூலமாக ஏராளமானோர் தங்களது பணத்தை இழந்து வந்தனர். செல்போன்கள், கணினி மூலமாக எளிதாக பலரும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். அதில் அவர்கள் தங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை வைத்து விளையாடினார்கள். இதற்கு அடிமையாகிய பலர் தங்களது பணம் முழுவதையும் இழந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு தள்ளப்பட்டார்கள். இதையடுத்து ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்தநிலையில் குதிரை பந்தயத்தில் ஆன்லைன் சூதாட்டம் நடத்தப்படுவதாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தடுக்க அவர், ஈரோடு சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜானகிராம் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசுதா, சப்-இன்ஸ்பெக்டர் (தொழில்நுட்பம்) செல்வி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
2 பேர் கைது
இந்த தனிப்படை போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில், சத்தியமங்கலத்தை சேர்ந்த நளின்குமார் (வயது 28), திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த சிவசங்கர் (39) ஆகியோர் ஆன்லைன் வழியாக சூதாட்டம் நடத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் ஈரோடு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மடிக்கணினி, செல்போன் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவர்களது வங்கி கணக்கில் நடந்த பணபரிவர்த்தனை குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எனவே ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவது தெரியவந்தால், தமிழ்நாடு சூதாட்ட புதிய சட்ட திருத்த விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Next Story